செண்டை
“பதினெட்டு வாத்யவும் செண்டைக்கு தாழே”. கேரள மண்ணில் வழக்கில் உள்ள பழமொழி. மலையாளத்திற்கு “கொடுந்தமிழ்” என்று மற்றொரு பெயரும் உண்டு.
மேற்சொன்ன பழமொழி மூலம் “பதினெட்டு வாத்தியங்களும் செண்டைக்கு கீழ் தான்” என்று புரியும். “மிருதங்கம்” “மத்தளம்” “திமில” “இடக்க” “உடுக்கு” “மிழவு” “தம்புரு” “வீனா” “புல்லுவ வீனா” “குழல்” “குருங்குழல்” “நாகஸ்வரம்” ஓடக்குழல்” “கொம்பு” “மஞ்சிற” “ஷங்கு” “தொப்பி மத்தளம்” “புல்லுவன் குடம்” ஆகியவை அந்த பதினெட்டு வாத்தியங்களில் அடங்கும். இறைமை தொடர்புடைய மங்கள காரியங்களுக்கு இசைக்கப்பட்டவையாகவே இவை உள்ளன.
ஆலயங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இசைக்கப்படும் பல தாள வாத்தியங்களில் “பாஞ்சாரி மேளம்” மற்றும் “பாண்டி மேளம்” மிகவும் பிரபலமானதும் பழமையானதும் ஆகும். இதில் “பஞ்சாரி மேளம்” மற்றவைகளுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது. “செம்பட” “அஞ்சதந்த” “த்ருவம்” “அதந்த” “சம்ப” ஆகியவையும் இதர மேளங்கள் ஆகும்.
செண்டை இசைக்கப்படும்போது அதன் துணை வாத்தியங்களாக “குரும்குழல்” “இலதாளம்” “கொம்பு” இருப்பதுண்டு. ஒவ்வொரு தாளம் மாறும்போதும் அதை நிர்வகித்து மாற்றுபவர் பெரும்பாலும் “குழல்” இசைப்பவர் ஆவார். இவரின் மாற்றங்களை மற்றவர் புரிந்து தாள மாற்றங்களை செய்வர்.
செண்டை இசைக்கப்படும்போது இசைப்பவர்கள் வரிசை கிரமமாக நிற்பர். “உருட்டு செண்டை” பிரதான வாத்தியமாகவும், “வீக்கம் செண்டை” தாள நிர்ணய வாத்தியமாகவும், “இல தாளம்” வீக்கம் செண்டைக்கு துணை வாத்தியமாகவும், “கொம்பு மற்றும் குரும்குழல்” இரண்டும் மொத்த வாத்திய தாள கட்டைகளை ஒரு வரையறைக்குள்ளும், சமமாகவும் வைக்க உதவுகிறது.
செண்டை இசைப்பவர்கள் நிற்பதிலும் ஒரு விதிமுறை உண்டு. உருட்டு செண்டைக்கு சமமான எண்ணிக்கையில் கொம்பு மற்றும் குரும்குழல் இருக்கும். உருட்டு செண்டையை விட எண்ணிக்கையில் இளதாலம் இரு மடங்காகவும் வீக்கம் செண்டை மும்மடங்காகவும் இருக்கும்.
இசைக்கும்போது “தாளம்” “தாளவட்டம்” “காலம்” “அக்ஷரகாலம்” ஆகியவை மிக முக்கியமானதாகும்.
தாளம் – தாளம், காலத்தின் ஒரு பிரிவாகும்.
தாளவட்டம் – ஒரு தாள சுழற்சியை முடிக்க உதவும் கால நிர்ணயம்.
காலம் – தாள சுழற்சியை குறிப்பிட்ட கால நிர்ணயத்திற்குள் முடிக்க உதவும்
வேக மாறுபாடு.
அக்ஷரகாலம் – ஒரு நொடிக்குள்ளான தாள அமைப்பு குறித்தது.
செண்டை பாரம்பரிய முறைப்படி கற்பிக்கப்படுகிறது. ஆரம்ப வகுப்புகளில் உள்ளங்கை பதப்பட வேண்டி மரத்தில் அடித்து தாள ஓசை சொல்லி கொடுக்கப்படுகிறது. பிறகு செண்டைகோல் சுழற்ற பயிற்சி அளிக்கப்படும்.
இரு கைகளிலும் செண்டை கோல் வைத்து சுழற்றி இசைக்கும்போது வலது கையில் உள்ள கொம்பானது செண்ட வட்டத்தின் மேல் பாகத்திலும் இடது கையில் உள்ள கொம்பானது செண்ட வட்டத்தின் கீழ் பாகத்திலும் அடித்து ஓசை எழுப்பப்படுகிறது.
செண்டை இசை பயிற்சியில் முதல் தாளமாக “கணபதி கை” உள்ளது. இந்த தாளத்தில் முப்பத்தியேழு இசை துடிப்புகள் உண்டு.
“கணபதி கை” தாளம் பயின்றதும் “த கி ட” என தொடங்கும் “சாதகம்” பயிற்றுவிக்கப்படுகிறது.
“த கி ட” பயிற்சியில் “ஒன்னாம் காலம்” “ரண்டாம் காலம்” “மூணாம் காலம்” “நாலாம் காலம்” என வேக வடிவத்தின் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நான்கு காலமும் 3, 6, 9, 12 தாளக்கட்டு பிரமாணத்தில் உயர்ந்து கொண்டே செல்லும்.
“வாய் தாரி” என்பது “சாதக” பயிற்சியின் போது சொல்லப்படும் “வாய் பயிற்சி” ஆகும்.
செண்டை வாத்தியத்தில் பல சாதக முறைகள் உள்ளது. இந்த இசையை முறைப்படி கற்றுத்தரும் ஆசான் இதை தனது சீடர்களுக்கு கைவசப்படுத்தி தருகிறார். சாதகம் என இங்கே கூறுவது ஒவ்வொரு நிகழ்வுக்கு ஏற்றவாறு தாள மெட்டுக்களை மாற்றி அமைப்பதாகும். இதில் முக்கியமாக கோயில் சம்பந்தப்பட்ட தாள மெட்டுக்களும், வாழ்வியலின் சுப நிகழ்சிகளுக்கான தாள மெட்டுக்களும் முக்கியமானதாக உள்ளது.
வாத்திய கலை பிரிவில் முன்பு சொன்னது போல் பல வகைகள் இருந்தாலும், அதில் முக்கிய இடம் “பாஞ்சாரி” “பாண்டி” “தாயம்பக” என்ற இசைக்கு உள்ளது. இதில் “தாயம்பக” ஆன்மீக நிகழ்சிகளில் முக்கிய இடம் வகிக்கிறது. “வலம் தல” பாகத்தில் இசைப்பதன் மூலம் “தேவ நாதம்” மற்றும் “இடம் தல” பாகத்தில் இசைப்பதன் மூலம் “அசுர நாதம்” இசைக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு குழுவும் தனக்கென ஒரு தனித்தன்மையை பின்பற்றும். தொடர்ச்சியாக பல குழுக்களின் இசையை கேட்டு ரசித்தவர்களால், ஒவ்வொரு குழுவின் தனித்தன்மையையும் எளிதில் அடையாளம் கண்டு ரசிக்க இயலும்
“பாஞ்சாரி”
செண்டையில் ஒரு கையில் செண்டைக்கோலும், மறு கை உள்ளங்கையாலும் வாசிப்பது “பாஞ்சாரி” யின் அடையாளம் ஆகும். ஒவ்வொரு பிரிவிலும் 5 காலம் என 3 பிரிவாக இசைக்கப்படுகிறது. 96 அக்ஷர காலத்தில் தொடங்கி, 6 அக்ஷர காலத்தில் நிறைவடைகிறது. மூன்று பிரிவையும் செண்டைக்கோல் சுழற்றுவதை வைத்து அடையாளம் காணலாம்.
முதல் பிரிவில் “நேர்க்கோல்” என்பது, முறைப்படி மெதுவாக செங்குத்தாக செண்டையில் அடித்து வாசிப்பது. இரண்டாம் பிரிவாகிய “தகிட” யில் இரு கைகளும் சாய்வாக சுழலும். மூன்றாம் பிரிவாகிய “குழ மறிஞ்ச” என்ற காலம் வேகமாக இசைப்பதாகும்.
பாஞ்சாரியில் “களமிடல்” என்பது அடிப்படை அல்லது முதல் தாளமாக உள்ளது. பாஞ்சாரி மேளம் இசைக்கப்படும்போது அதன் கட்டமைப்பு பன்னிரண்டாம் தாளமாகிய “செம்பட வட்டம்” முடியும்போது தீர்வாகும். செம்பட வட்டம் என்பது ஒரு அக்ஷர காலத்தை எட்டு பிரிவாக பிரிப்பதாகும். இரண்டாம் காலமாகிய “விளம்ப காலம்” (பதி காலம்) “வர்திகம்” எனப்படுகிறது. மேளத்தின் பயணம் இரண்டில் தொடங்கி ஐந்தாம் தாளத்தின் வழியே பயணிக்கிறது. அதாவது 6, 3, 1 ½, ¾ செம்பட வட்டத்தில் பயணப்பட்டு “தீரு கலசம்” என்ற ஐந்தாம் தாளத்தில் நிறைவுறுகிறது.
“பாண்டி”
கேரள மாநிலத்தில் திருச்சூர் என்னுமிடத்தில் உள்ள “பாறைமேல் காவு” (காவு என்றால் கோயில் என்று பொருள்) என்ற கோயிலின் திருவிழாவில் வாசிக்கப்படும் “இலஞ்சி தர மேளம்” என்ற நிகழ்வில் முக்கிய பங்கு வசிக்கும் இசை “பாண்டி” ஆகும்.
செண்டை மேளங்களில் மிகவும் வித்தியாச அமைப்பை கொண்டது “பாண்டி” மேளம். சம அளவு எண்ணிக்கையில் ஏற்ற, இறக்கங்களை கொண்ட தாள அமைப்பை உடையது “பாண்டி” மேளம்.
“பாண்டி” மேளத்தின் துவக்கம் “கோலும்பல் எனும் கூட்டி பெருக்கல்” என்ற முறையில் துவங்குகிறது. “பாண்டி” மேளத்தின் தாள அமைப்பை “காலம்” “அக்ஷர காலம்” என பிரிப்பது மிகவும் கடினம். கால பிரமாணங்களுக்கு கட்டுப்படாதது என்றாலும், எல்லா தாள கட்டுகளையும் சீரான வேகத்தில் கடந்து “கலசம்” எனப்படும் முடிவை அடைகிறது. நான்காம் தாள வட்டம் முடிந்த பிறகு வரும், மூன்று முதல் ஆறு தாள வட்ட காலப்பிரமாணத்தில் “கலசம்” எனும் முடிவை அடைகிறது. கலச தாள வட்டங்கள் “நேர்க்கோல்” முறைப்படி வாசிக்கப்படுவது “பாண்டி” மேளத்தின் தனிச்சிறப்பாகும். நூற்றுக்கு மேற்பட்ட செண்டை மேளங்களும், ஐம்பதுக்கு மேற்பட்ட துணை வாத்தியங்களும் இசைப்பதை ரசிப்பது தனி சுகமாகும்.
“தாயம்பக”
வாத்திய கலையின் மற்றொரு முக்கியமான அம்சம் “தாயம்பக”. “இல தாளம்” உதவியுடன் “செண்டை” யில் ஒன்று அல்லது இரண்டு பிரமாணிகள் சேர்ந்து இசைப்பது “தாயம்பக”.
“தாயம்பக” முற்றிலும் ஆலய வாத்தியம் ஆகும். “தீப ஆராதனை” மற்றும் “அத்தாழ பூஜை” க்கும் இடையில் இசைக்கப்படுகிறது. ஆலயத்தில் உள்ள “பெரிய பலிக்கல்” மற்றும் “பலி வட்டம்” ஆகிய இடங்களுக்கு இடையில் நின்று வாசிக்கப்படுகிறது. அரை மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேர கால அளவில் இசைக்கப்படுகிறது.
ஆலய வாத்தியங்கள் இசைக்கப்படும்போது, இசை கலைஞர்கள் முன்பு “திரு விளக்கு”, நுனி வாழை இலையில் “அரிசி” “தேங்காய்” “வெற்றிலை” “பாக்கு” “தக்ஷிணை எனப்படும் காணிக்கை” (காணிக்கை பொதுவாக “தங்கம்” “வெள்ளி” அல்லது ‘பணம்”) வைக்கப்படுவது வழக்கம். “தாயம்பக” இசையில் “பிரமாணி” எனப்படும் தலைவர் நடுவிலும், இரு பக்கமும் “இல தாளம்” நிற்க இசைக்கப்படுகிறது.
செண்டையின் வலம் தலையில் “கொட்டிவேல்க்குக” (இசைத்து வரவேற்றல்) எனும் முறையில் வணக்கம் செலுத்தும் விதமாக இசைத்து “திரிபுட” என்னும் தாளத்தில் தொடங்கி “ஏக” என்னும் தாளத்தின் வழியே நிகழ்ச்சிக்கு முன்னுரை அமைக்கப்படும். இப்போது “பிரமாணி” எனும் தலைவன் இரு முறை தன் கோலால் இசைத்து நிகழ்ச்சியின் துவக்கத்தை அறிவிப்பார்.
“பதி காலம்” (செம்பட வட்டத்தின் துவக்க தாளம்) தொடங்கி, “கூறு” “இடவட்டம்” எனும் முதல் நிலை கடந்து “எட நில” “எரி கிட” என்ற இரண்டாம் நிலை வழியே உயர் தாளத்தை அடைந்து பின் “நீர் வீழ்ச்சி” போல் கீழ் தாளத்தை அடைந்து நிறைவுறுகிறது.
“தாயம்பக” நிகழ்ச்சியில் “பிரமாணி” எனப்படும் தலைவரின் எண்ணிக்கை தேவைக்கேற்ப கூட்டப்படும். பிரமானிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப “வலம் தல” மற்றும் “இல தாளத்தின்” எண்ணிக்கை கூட்டப்படும். எண்ணிக்கை எவ்வளவு மாறினாலும் “இடம் தல” இரண்டு மட்டுமே இருக்கும்.
“தயம்பக” இசைக்கும்போது, குழுவின் தலைவர் ஆகிய “பிரமாணி”
தன்னுடன் இசைக்கும் மற்ற இசை கலைஞர்களுடன் தன் செண்டையின் வழியே இசை கட்டைகளின்
குறிப்பை உணர்த்தும் அழகே அலாதியானது. அவர் தான் ஒவ்வொரு சீடனுக்கும் தனித்தனியே
இசைத்து அவர்களின் திறமையை ஊக்குவிப்பதோடு இசைக்கு மெருகேற்றுவார்.
நாம் மயங்க செண்டை தொடர்ந்து முழங்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக