செவ்வாய், 16 டிசம்பர், 2014

ஆன்மீக அறிவியல்

உறவுகளே,

வணக்கம்.
சில நாட்கள் முன்பு நானும் எனது ஒரு நண்பரும் ஒரு கருத்தை குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டிருந்தோம். பல வருடங்களாக நான் நம்பி வரும் ஒரு கருத்தை அவர் முன் வைத்தார். பிடித்திருந்தது. அது பகுத்தறிவும், ஆன்மீகமும் குறித்தது. அதில் என் பார்வை.....


பகுத்தறிவு என்பது தமிழ் நாட்டை பொறுத்தவரை தந்தை பெரியார் எனவும், ஹிந்து மதத்திற்கு எதிரானது என்ற அளவில் நின்று விட்டதோ என்று சிந்திக்க வைக்கிறது. பெரியாருக்கு முன்பு இந்த உலகத்தில் பகுத்தறிவு சிந்தனை இருந்ததே இல்லையா? கடவுள் மறுப்பு மட்டுமே பகுத்தறிவா?



மதம் (???) என்பதோ, அதன் அடிப்படை தன்மையான அறிவியல் பார்வையை மறந்து மூட நம்பிக்கை மட்டுமே ஆன்மிகம் என்றாகி விட்டதோ என்றும் யோசிக்க வைக்கிறது.



என்னை பொறுத்தவரை, ஆன்மீகத்தின் அடிப்படை பகுத்தறிவும், பகுத்தறிவின் உச்சம் ஆன்மீகமும் ஆகும்.


தன் கருத்துக்கு மாறுபட்ட கருத்து உடையவர்களை தரக்குறைவாக பேசுவது எப்படி ஆன்மீகமோ, பகுத்தறிவோ ஆகும்?

சனாதன தர்மம், புத்தம், பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் எல்லாம் மனிதன் மனிதனாக வாழ அறிவுறுத்தும் அறிவுரைகள் மட்டுமே.

கிருஷ்ணன் ஹிந்து மதத்தையோ, புத்தன் புத்த மதத்தையோ, மகாவீரர் பெளத்தரோ, இயேசு கிறிஸ்தவரோ, முகம்மது இஸ்லாத்தையோ பிறப்பால் சார்ந்தவர் அல்லவே!
எல்லா மதங்களும் போதிப்பது அன்பை மட்டுமே. பகுத்தறிவுவாதிகளின் உயிர் நாதமும் அன்பே. பிறகு எங்கே வந்தது பேதம்? நான் சரி, நீ தவறு என ஒருவர் மீது மற்றொருவர் காட்டும் நாகரீகமற்ற அதிகார அதிகபிரசங்கி தனமும், நான் சொல்வதை நீ ஏற்று கொள்ள வேண்டும் என்ற ஆண்டான் அடிமை மனோபாவமே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்.

"நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" என்றவனை தூக்கி எறிந்த ஹிந்துவும், இறைவன் ஒருவனே, அது அன்பே, என போதித்த கிறிஸ்துவ, இசுலாமிய கொள்கையை அப்படியே பின்பற்றாத கிறிஸ்தவனும், இசுலாமியனும், காண முடியாத, உணர முடியாத ஒன்றை இல்லை என்று நம்புவதும் ஒரு மூட நம்பிக்கையே என்பதை ஏற்காத பகுத்தறிவுவாதிக்கும் மற்றவரை சாட என்ன உரிமை உள்ளது?

தம் குறையை சம்மதிக்கவும், சரி செய்யவும், பிறரின் சிறப்பை மனமார பாராட்டவும் மன தைரியம் தேவை.

கோயில் பூசை என்ற பெயரில் இரவு பகல் பாராமால், ஒலி பெருக்கி வைத்து, வெடிகளை வெடிக்க செய்து மற்றவரை தொல்லை படுத்துவதிலும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. எவனோ ஒருவன் உழைத்து சம்பாதித்த பணத்தில் கட்டிய வீட்டின் வெள்ளை சுவரில் கரி கட்டையால் "கடவுள் இல்லை, கடவுளை படைத்தவன் முட்டாள்" என்று பெரிதாக எழுதுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. 

ஹிந்து, கிறிஸ்தவ, இசுலாமிய, புத்த, பெளத்த, சமயங்கள் போதிப்பவைகளை அப்படியே ஆன்மிகம் என்ற பார்வையில் பார்ப்பதை விடுத்து, அவையாவும் மனிதன் வாழ்வதற்கு ஏதுவாக சொல்லப்பட்ட அறிவியல் சார்ந்த வாழ்வியல் முறை என்பதை ஏற்றுகொள்வதில் என்ன தடை என்று விளங்கவில்லை! ஆராய்ச்சி தானே ஆன்மிகம்! ஆராய்ந்ததை பகுத்து அறிவது தானே பகுத்தறிவுவாதம்! 

ஆன்மிகம் என்பதே அறிவியல் தான் என ஏற்றுக்கொள்ள ஏன் நம் மனம் மறுக்கிறது என்று புரியவில்லை. இது கடவுள் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கும் பொருந்தும் தானே?

 

பேசுவோம்......



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக