உறவுகளே,
சில வருடங்களுக்கு முன்னாள் வரை தமிழ்
நாட்டில் “செண்டை மேளம்” என்பது
கார்த்திகை, மார்கழி காலங்களில் மட்டுமே கேட்டு வந்த இசையாக இருந்தது.
“மலையாளத்தார் மேளம்” என்றும் செல்லமாக சொல்லப்படுவதுண்டு. முக்கியமாக ஐயப்பன் பூஜைகளில்
ஒலித்த இந்த வாத்தியம் ஒரு முக்கியமான, தெய்வீகமான, கேட்க சுகமான இசையாக வளம்
வந்து கொண்டிருக்கிறது. நம் தமிழ் நாட்டில் எப்படி “நாதஸ்வரம் மற்றும் தவில்”
உட்பட பல வாத்தியங்கள் முக்கியமான மங்கள இசையாக கருதப்படுகிறதோ அதே போன்று கேரள
மண்ணில் பல வாத்தியங்கள் இருந்தாலும்
“செண்டை மேளம்” மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கோயில்களின் தினசரி
பூஜைகளில் இருந்து, ஊர் திருவிழாக்கள் வரை இந்த செண்டை மேளம் முக்கிய இடம்
வகிக்கிறது.
இசையை ரசிப்பது ஒரு வகை இன்பம். அதே சமயம், அந்த
இசை எதிலிருந்து வருகிறது, எப்படி வருகிறது, அதன் ஒலி கணக்குகள் என்ன என்பது போன்ற
விவரங்கள் நமக்கு தெரிந்திருந்தால், அந்த இசையை ரசிப்பது மேலும் சுகம் அளிப்பதாக
இருக்கும் அல்லவா? அப்படிதான், நான் சிறு வயது முதல் ரசித்து கேட்டு வந்த இந்த
இசையை அதன் நுணுக்கங்கள் தேடி படித்து சிறிதளவு புரிந்து கொண்டு ரசிக்க தொடங்கியபோது
அது மேலும் சுவையானதாக இருந்தது.
இந்த செண்டை மேளம் குறித்து மேலும் தெரிந்து
கொள்ள வேண்டும் என்ற உந்துதலில், பலரிடமும் கிடைக்கிற சந்தர்ப்பங்களில் பல
கேள்விகளுடன் சமீபித்திருக்கிறேன். பலரும் பல கதைகளை சொன்னார்கள். ஆனால் அவர்களில்
முக்கியமாக இருவர் எனக்கு பகிர்ந்த சில யதார்த்தமான விவரத்துளிகள் என்னை இந்த
கலையை நோக்கி சற்றே நகர்த்தியது. இந்த இசையை வாசிக்க பெரும் பயிற்சி வேண்டும்,
உடம்பு ரொம்பவே வணங்க வேண்டும். அது நம்மால் ஆகாது. ஆனால் அதை பற்றி தெரிந்து
கொள்ள வேண்டும் என்று என் மனம் ஆசைப்பட்ட வேலையில் நான் மேலே சொன்ன இருவரும் பகிர்ந்த
சின்ன, சின்ன விஷயங்கள் எனது ஆசையில் எண்ணெயை ஊற்றி விட்டன. இது நடந்து பத்து,
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எழுத வேண்டும் என எண்ணி இருந்தேன்,
துவங்கினேன் ஆனால் தொடர முடியவில்லை. அவ்விருவரும் பெரிய பல கலைகளுக்கு சொந்தக்காரர்கள்.
நான் சிறுபிள்ளை தனமாக கேட்ட கேள்விகளுக்கும் என் ஆர்வத்தை பாராட்டி விவரங்களை
சொல்லினர். அவர்கள் பகிர்ந்து கொண்ட விதமோ என்னவோ தெரியவில்லை, நான் வாய்ப்பு
கிடைக்கும்போதெல்லாம் இந்த கலை சம்பந்தப்பட்ட செய்திகளை சேகரிக்கவும், படிக்கவும்,
கேட்கவும் செய்து மனதில் பதியம் போட்டு வைத்திருந்தேன்.
சில விஷயங்களில் நம்மை சிலர் நேரடியாக இல்லா
விடிலும், மறைமுகமாக பாதிப்பதுண்டு, நாம் அவர் பால் ஈர்க்கப்படுவதுண்டு.
அவ்வகையில் புத்தக காதலையும், வாசிக்கும் பழக்கத்தையும், விவர சேகரிப்பையும் நேரடியாக போதிக்க வாய்ப்புகள் அமையவில்லை
எனினும், தன் செயலால் அந்த ஈர்ப்பை என்னுள் விதைத்து உண்டு பண்ணிய சகோதரர் “திரு.
வர முருகன்” அவர்களை நன்றியுடன் நினைக்கிறேன்.
“செண்டை மேள” கலை பற்றிய நுணுக்கங்களை
துணுக்குகளாக என்னுள் விதைத்த “அமரர். மாயனூர் குமாரன்” மற்றும் “அமரர்.
கார்த்திகேயன்” அவர்களையும் நினைக்கிறேன். விரைவில் அவர்களை சந்திக்கும் போது
முதுகில் தட்டி “சபாஷ்” என்று சொல்வார்கள் என்று நம்புகிறேன்.
என் மன திருப்திக்கு பதிய வேண்டும் என
நினைத்தாலும் உலகுடன் பகிர வேண்டும் என ஆசைப்பட்டேன். இது என் அறிவு அல்லவே!.
பெரியவர்களின் அறிவும், அனுபவமும், வலை பதிவுகள் மற்றும் புத்தகங்கள் என்னிடம்
சொன்னவையே ஆகும். சரி. விஷயத்திருக்கு வருவோம். நம் கட்டுரையின் கதாநாயன் “செண்டை”
அவர்களை பற்றிய விவரங்களை பார்ப்போம்.
செண்டை:
“செண்டை”யின் பெயர்க்காரணங்கள் குறித்து பல
கதைகள் கூறப்படுகிறது. இதனை “அசுர வாத்தியம்” “அவநாத வாத்தியம்” என்றும் சொல்வார்கள்.
இதற்கான காரணத்தை பிறகு பார்ப்போம்.
“செண்டை” மரத்தில் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு உருளை. மலையாளத்தில் “வரிக்க ப்ளா” என்றழைக்கப்படும் “வைரம் பாய்ந்த” பலா மரத்தின் மென்மையான பாகத்தில் இருந்து இரண்டு அடி உயரமும் பத்து அங்குல சுற்றளவும் ஒன்றரை அங்குலம் தடிமனும் உள்ளதாக கடைந்து எடுக்கப்படுகிறது. இறுதியில் தடிமன் கால் அங்குலமாக குறைக்கப்படுகிறது. கை தேர்ந்த மர வேலை செய்யும் இசை தச்சு வகுப்பை சேர்ந்தவர்கள் இத்தகு மரத்தினை எளிதில் கண்டறிகின்றனர்.
“இடம் தல” மற்றும் “வலம் தல”
சென்டையின் இருபுறங்களை குறிப்பிடுகையில், “இடம்
தல (இடது தலை)” என்றும் “வலம் தல (வலது தலை)” என்றும் அழைக்கின்றனர். இந்த “இடம்”
“வலம்” தலைகளில் மூப்படைந்து மரித்த பசுவின் வயிற்றின் மென்மையான அடிப்பாகத்து
தோலை பதப்படுத்தி, நிழலில் காய வைத்து, முறுக்கேற்றப்பட்டு பதிக்கப்படுகிறது. பசுத்தோலின்
தடிமன் “இடம்” மற்றும் “வலம்” தலைகளில் வித்தியாசப்படுகிறது. “இடம் தல” யில் ஒன்று
அல்லது இரண்டு அடுக்கு கொண்ட தோலும், “வலம் தல” யில் ஐந்து முதல் ஏழு அடுக்கு வரை உள்ள
தோலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
“செண்ட வட்டம்”
செண்ட வட்டம் என்பது சிறந்த பனை மரம் அல்லது மூங்கில்
மரத்தின் பாகங்கள் நன்கு சூடாக்கி பதப்படுத்தப்பட்ட பிறகு வட்ட வடிவில்
வளைக்கப்பட்டு “பணஞ்சி மரம்” என்றழைக்கப்படும் மரத்தின் விதை மற்றும் பிரத்யேக
மூலபொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பசையினால் இணைக்கப்பட்டு தோல் கொண்டு
மூடப்பட்ட ஒரு வளையம் ஆகும். மேலே சொன்னது போல் இங்கும் பசுத்தோலின் தடிமன் “இடம்”
மற்றும் “வலம்” தலைகளில் உள்ள செண்ட வட்டத்தில் வித்தியாசப்படுகிறது. “இடம் தல”
யில் ஒன்று அல்லது இரண்டு அடுக்கு கொண்ட தோலும், “வலம் தல” யில் ஐந்து முதல் ஏழு
அடுக்கு வரை உள்ள தோலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
“வார்”
செண்டையில் பதிக்கப்பட்ட தோலினை சென்டையுடன்
இழுத்து பிடிக்கும் வேலையை “செண்ட வட்டம்” மற்றும் “வார்” பார்த்துக்கொள்கிறது.
செண்ட வட்டத்தின் வழியே நான்கு அங்குல
இடைவெளியில் பன்னிரண்டு இடங்களில் “வார்” என்றழைக்கப்படும் கயிறு மேலும் கீழுமாக படு
இறுக்கத்தில் கட்டப்பட்டு, கயிற்றின் இரு முனைகளும் ஒரு சிறு தோல் துண்டினால்
இணைக்கப்படுகிறது. இன்று, இது “நைலான்” கயிறாகவும் வேதியல் பசையாகவும் மாற்றுரு
பெற்றிருக்கிறது.
“செண்டக்கோலு”
பதமாகிய புளிய மரம் அல்லது பிரம்பின் சிறந்த
பகுதி வெட்டி எடுக்கப்பட்டு, இயற்கை கலவையால் உண்டாக்கப்பட்ட எண்ணெயில் ஊற
வைக்கப்பட்டு, சூடு படுத்தி பதப்படுத்தப்பட்டு, பின் பகுதி பருமனாகவும் (மூன்று
அங்குலம்), முன் பகுதி குறுகலாகவும் (இரண்டரை அங்குலம்) வலமிருந்து இடமாக
வளைக்கப்படுகிறது. செண்டக்கோலின் நீளம் இருபத்தி ஒன்பது சென்டி மீட்டர் ஆகும்.
“தூக்கு”
செண்டையின் சுருதி பாகத்தின் எதிர் பக்கம்
மேலும் கீழுமாக ஒரு துணி வளையம் கொண்டு இணைக்கப்பட்டு செண்டையை தூக்கி தோளில்
மாட்டுவதற்கு ஏதுவாக கட்டப்படுகிறது. இதனை பொதுவாக “தூக்கு” என்று சொல்லுவார்கள். இதன்
அளவு இசைப்பவரின் உயரம் மற்றும் பருமனை பொருத்து வேறுபடுகிறது.
செண்டை வகைகள்:
செண்டையில் பல வகைகள் உண்டு. செண்ட வட்டத்தின்
சுற்றளவை வைத்து “எட்டர வீச்சன் செண்டா” (எட்டரை அங்குலம்), “ஒன்பது வீச்சன்
செண்டா” (ஒன்பது அங்குலம்), “ஒன்பதர வீச்சன் செண்டா” (ஒன்பதரை அங்குலம்), “ஒன்பதே
முக்கால் வீச்சன் செண்டா” (ஒன்பதே முக்கால் அங்குலம்”, “ஒன்பதே முக்காக்கலி செண்டா”
(சரியாக ஒன்பதே முக்கால் அங்குலம்) என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு செண்டையும்
ஒவ்வொரு விதமான சூழலுக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது.
செண்டையின் பிரிவுகளும் பயன்பாடும்:
செண்டையின் பயன்பாட்டிற்க்கு அதன் பிரிவும், பயனும்
மாறுபடும். “வீக்கு செண்ட” அல்லது “அச்சன்
செண்ட”, “உருட்டு செண்ட” அல்லது “முறி செண்ட” ஆகியவை செண்டையின் முக்கிய பிரிவாகும்.
“உருட்டு செண்ட” இசைக்கும்போது ஒலி ஏற்ற இறக்கங்களை உண்டாக்க உதவுகிறது. இது செண்டை
வாத்தியத்தை முன் நடத்தி செல்கிறது. இதனால் “பிரமான வாத்யம்” (முக்கியமான
வாத்தியம்) என அழைக்கப்படுகிறது. உருட்டு செண்டையின், செண்ட வட்டம் எப்போதும் “இடம்
தல” யில் (இடது தலை பக்கம்) பொருத்தப்படும். இது ஒற்றை பசுத்தோலினால் ஆனது. “உருட்டு”
என்றாலே “உருட்டுதல் அல்லது சுழற்றுதல்” என்று பொருள் உண்டு. உருட்டு செண்டையை
இசைக்கும்போது, இசைப்பவர் தன் வலது கை மணிக்கட்டால் “செண்டை கோலை” உருட்டி
இசைப்பர். முதல் தாளத்தில் இசைக்கும்போது, இசைப்பவரின் இடது உள்ளங்கை அவரை நோக்கி
(உள் நோக்கி) உருளும். இரண்டாம் தாளத்தில் அவருக்கு எதிர் பக்கத்தில் (வெளி
நோக்கி) உருளும்.
"வீக்கு செண்ட அல்லது அச்சன் செண்ட"
“வீக்கு செண்ட” அல்லது “அச்சன் செண்ட” இசையின் “தாளத்தை” சீர் பிரமாணத்தில் வைக்க
உதவுகிறது. “வீக்கு செண்ட” அல்லது “அச்சன் செண்ட” யில் “செண்ட வட்டம்” “வலம் தல”
யில் (வலது தலை பக்கம்) பொருத்தப்படுகிறது. இதன் தோல் பல அடுக்குகளை உடையதாக
இருக்கும். இதன் மூலம் “மத்திம” ஓசை உண்டாக்கப்படுகிறது. “வீக்கு” என்பதன் பொருள் “வேகமாக
அடிப்பது”. இங்கு இசைப்பவரின் “செண்டக்கோல்” வேகமாக அடிக்கப்பட்டு ஓசை எழுப்பப்படுகிறது.
இந்த நிலையில் இசைப்பவர் தமது உள்ளங்கை கொண்டு இசைப்பதில்லை. மாறாக இரு கைகளிலும்
செண்டை கோல் வைத்து ஓங்கி அடித்து இசைப்பார்.
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு ஐயப்பன் பூஜையில்
செண்டை வாசிக்கும் குழுவின் முக்கிய நபரிடம் நம் “குடிமகன்” ஒருவர் சென்று “எவ்வளோ
சத்தமா வாசிக்கிறியோ அவ்வளவுக்கு காசு” என்று சொன்னார். அந்த சூழ்நிலையில்
அங்கிருந்த ஒரு குரு ஸ்வாமி "குடிமகனை" பார்த்து ஏளனமாக சிரித்தார். சூழ்நிலைக்கேற்ப (புரியாமல்) நானும்தான். சில நிமிடம் கழித்து திரு. கார்த்திகேயன் என்னிடம் தனிமையில் மிகவும்
சாதாரணமாக “அவனை இந்த இசை ஏதோ ஒரு வகையில் ஈர்த்ததால் தானே அவன் இங்கு வந்து
சத்தமாக (சிறப்பாக) வாசிக்க சொல்கிறான். இவன் தான் இசையின் சிறந்த ரசிகன்”
என்றார். பின்னந்தலையில் சடார் என்று அறைந்தது போல் ஒரு உணர்வு. மிகப்பெரிய கருத்தை
மிக எளிமையாக வித்திட்டார்.
திரு. கார்த்திகேயனின் அவர்களின் நினைவோடு இந்த அளவில்
நிறுத்தி, செண்டை பற்றிய மற்ற செய்திகளை வரும்
பதிவுகளில் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக