வெள்ளி, 19 டிசம்பர், 2014

பஞ்ச வாத்தியம்

பஞ்ச வாத்தியம்

                 


"இறைவனின் சொந்தம் நாடு" என அறியப்படும் கேரளம் என்கிற சேர நாடு, தாய் தமிழகத்தை போலவே பல கலைகளுக்கு பிறப்பிடம் என்ற மிக முக்கிய அந்தஸ்தும், அக்கலைகளை ரசிக்கவும் அதன் வளர்ச்சிக்காக பாடுபடவும் மனமுள்ள மக்களை கொண்டது என்பதும் வரலாற்று உண்மை. இத்தகு கலை ரசிகர்களை கொண்டதாலோ என்னவோ, கேரளம் தமிழ் நாட்டை போலவே கலைகளின் குவியலாக திகழ்கிறது.


 பொதுவாக கேரள கலைகளில் குறிப்பிடும்படியாக அறுபத்து நான்கு கலைகளை “திருவிதாங்கூர் அரண்மனை” ஏடுகளில் காண முடிகிறது. இவை வரிசை கிரமமாக இல்லை என்றாலும், ஏறக்குறைய அவற்றின் காலக்கிரமத்திற்க்கு ஏற்றவாறு உள்ளதாக வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அக்கலைகள் கீழ் வருமாறு:

1.       அர்ஜுன ந்ருத்தம்
2.       ஆதி வேடன் கலி
3.       சாக்கியார் கூத்து
4.       நங்கியர் கூத்து (நங்கையர் கூத்து)
5.       ஷோபான சங்கீதம்
6.       ஒப்பன
7.       கரடி ஆட்டம்
8.       கம்பாடி கலி
9.       ஐவர் கலி
10.    கண்யார் கலி (கன்னியர் கலி)
11.    காக்கரிஷி கலி
12.    காளியூட்டு
13.    குருமார் கலி
14.    களமெழுத்து
15.    கூடியாட்டம்
16.    கும்மாட்டி கலி
17.    கொத்தாமுரியாட்டம்
18.    புல்லுவன் பாட்டு
19.    கருடன் தூக்கம்
20.    சவிட்டு கலி
21.    சாத்தான் கலி
22.    சோழி கலி
23.    மோஹினி ஆட்டம்
24.    தாளம் கலி
25.    திடம்பு ந்ருத்தம்
26.    திருவாதிர கலி
27.    தீயாட்டு கலி
28.    களரிப்பயட்டு
29.    துள்ளல்
30.    தெய்யம்
31.    தெய்யன்னம்
32.    தோல் பாவக்கூட்டு
33.    தவ்வு முட்டு
34.    புளிக்கலி
35.    நாகச்சுட்டு
36.    நாயக்கர் கலி
37.    படையணி
38.    பள்ளு கலி
39.    பாணியர் கலி
40.    பரிச்சமுட்டு கலி
41.    கூரன் கலி
42.    பதிச்சி கலி
43.    பாக்கனார் கலி
44.    பானக்கலி
45.    பூதம் கலி
46.    பூதனும்திரையும்
47.    பூரம் கலி
48.    பஞ்ச வாத்தியம்
49.    பத்ரகாளி துள்ளல்
50.    யக்ஷ கானா
51.    கூடியாட்டம்
52.    மலையிக்கூட்டு
53.    மங்களம் கலி
54.    கேரள நடனம்
55.    மார்க்கம் கலி
56.    முடியேட்டு
57.    முடியாட்டம்
58.    வடி தல்லு
59.    வட்ட கலி
60.    வில்லடிச்சான் பாட்டு
61.    வேடன் துள்ளல்
62.    வேள கலி
63.    சர்ப்பம் துள்ளல்
64.    பூதன் திர

மேற்கண்ட கலைகள் வெவ்வேறு நிகழ்ச்சிகளின் சூழலுக்கேற்ப நிகழ்த்தப்படுகிறது. இவற்றில் வாத்திய கலையில் “பஞ்ச வாத்தியம்” மிக முக்கிய இடம் வகிக்கிறது. 

கேரளா, தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, மும்பையின் செம்பூர், டும்பிவில்லி, டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் உள்ள கிருஷ்ணன், சிவன், ஐயப்பன், தேவி ஆலயங்களில் முக்கியமாக கார்த்திகை, மார்கழி காலங்களில் இந்த வாத்தியம் முக்கிய இடம் பெறுகிறது. நாமும் கேட்டிருப்போம், ரசித்திருப்போம். பஞ்ச வாத்தியம் குறித்த சில விஷயங்கள் இதோ.

பஞ்ச வாத்தியத்தின் தோற்றம் குறித்து சரியான குறிப்புகள் இல்லை என்றாலும், இந்த கலை பன்னெடுங்காலமாக பல ஆலயங்களை அலங்கரித்து மனங்களை கொள்ளை கொண்டு வருகிறது. பஞ்ச வாத்தியம் கடந்த 80 வருடங்களுக்கும் மேலாக ஆலயங்களை அலங்கரித்து வருகிறது. இன்றைய அளவில் இசைக்கப்படும் பஞ்ச வாத்தியத்தின் அடித்தளம் 1930 காலக்கட்டத்தில் மறு சீரமைக்கப்பட்டது. இந்த இசையின் ஜாம்பவான்களாகிய திருவில்லா மலை வெங்கடேஸ்வர ஐயர் மற்றும் அவரது சீடர் மாதவ வாரியர் மற்றும் குழுவினர் முயற்சியால் பதிகாலம் முதல் ஐந்தாம் காலம் வரை உள்ள தாள கட்டுக்கள் வரையறுக்கப்பட்டு மறு சீரமைக்கப்பட்டு புழக்கத்தில் வந்தது.

இரண்டு மணி நேரம் வரை நீளும் இந்த இசையின் இனிமைக்கு இதன் இசை கருவிகள் மிக முக்கியம் ஆகின்றன. மற்ற செம்பட மேளங்களை போல பஞ்ச வாத்தியத்திலும் இசை கலைஞர்கள் அரை பிறை வடிவில் நின்று இசைக்கின்றனர்.


                                         


மற்ற செம்பட மேளங்கள் குறை வேக தாள கட்டுகளில் தொடங்கி வேக தாள கட்டைகளை எட்டுவது போல் அல்லாமல் சங்க நாதம் மூன்று முறை முழங்கியதுமே வேக தாள கட்டைகளை அடைகிறது பஞ்ச வாத்தியம்.

பெயருக்கு ஏற்றதுபோல் பஞ்ச வாத்தியம் ஐந்து இசை கருவிகளுடன் இசைக்கப்படுகிறது. “திமில” “மத்தளம்” “இலத்தாலம்” “இடக்க” மற்றும் “கொம்பு” ஆகியவை பஞ்ச வாத்தியத்தின் இசை கருவிகள் ஆகும். இவ்வைந்தில் முதல் நான்கும் தாள வாத்திய குடும்பத்தையும், கொம்பு காற்றிசை குடும்பத்தையும் சார்ந்தது. மற்ற எல்லா செம்பட மேளங்களை போலவே பஞ்ச வாத்தியத்தின் தாள கட்டைகள் பிரமிட் அமைப்பில் வேகம் கூடி கொண்டே செல்லும் வகையில் அமைந்துள்ளது.

பஞ்ச வாத்திய குழுவின் நடுவில் நிற்கும் “திமில” இசை கலைஞர், இலதாளத்தின் உதவியோடு இந்த இசையை வழி நடத்தி செல்கிறார். அவர்களுக்கு எதிரில், மத்தளம் இசைப்பவர்களின் வரிசையும், அவர்களுக்கு பின்னால் கொம்பு இசைப்பவர்களும் அணி வகுக்கிறார்கள். “இடக்க” இசை கலைஞர்கள் பொதுவாக இருவராகவும், இரு பக்கமும் திமிலை மற்றும் மத்தளத்துக்கு நடுவில் நின்று இசைக்கின்றனர். “சங்கு” மூல மற்றும் மங்கள இசையாக நிற்கிறது. “திமிலை” பஞ்ச வாத்தியத்தின் “பிரமான” வாத்தியம் ஆகும். இதில் இசை கலைஞர்களின் எண்ணிக்கை 12 முதல் 54 அல்லது 55 என நிகழ்ச்சி, நேரம், மற்றும் சூழலுக்கேற்ப இருக்கும்.

ஒவ்வொரு மத்தளமும் இரண்டு திமிலைகளாலும், ஒவ்வொரு திமிலைக்கும் சமமான எண்ணிக்கையில் கொம்பும், இலத்தாலமும் இருக்கும். ஒரு “இடக்க” கண்டிப்பாக இருக்கும். பெரிய குழுவில் இடக்க எண்ணிக்கை இரண்டோ அல்லது மூன்றோ ஆகிறது.

மத்தளம்
திமில
 
                    இடக்க

இலத்தாலம்

கொம்பு


சங்கு

                      

பஞ்ச வாத்தியத்தின் தொடக்கத்தின் அடையாளமாக “சங்க நாதம்” முழங்கப்படும். இது ஒரு மங்கள நிகழ்வின் தொடக்கம் என அருகில் உள்ளவருக்கும், ஊராருக்கும் அறிவிப்பதாகும். சங்க நாதம் இரு முறை “ஓம்” என ஒலித்து மூன்றாவது முறை ஒலிப்பதற்கான கால அட்டவணையில் முக்கால் பங்கு கடக்கையில் கொம்பு தவிர ஏனைய “மத்தளம், திமில, இடக்க, இலத்தாலம்,” ஆகியவை ஒரு சேர “ஓம்” எனும் ஒளியை எழுப்பும். இதன் பொருள் எல்லாவற்றிற்கும் துவக்கம் “ஓம்” எனவும் “ஓம்” மங்களத்தின் அடையாளம் எனவும் ஆகும்.

மேலே சொன்னது போல் பஞ்ச வாத்தியத்தின் தாள கட்டமைப்பு பிரமிட் வடிவத்தில் 10 காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  முதல் காலம் 896 அக்ஷர காலங்களில் தொடங்கி, 10வது காலத்தில் 1 ¾ அக்ஷர காலத்தில் நிறைவுறுகிறது. இந்த பத்து காலங்களும் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

1, 2 மற்றும் காலங்கள் மெதுவாக, நிதானமான தாள கட்டமைப்பை உடையது. இது “பதி களம்” அல்லது “பதி காலம்” என்று கூறப்படும்.

4, 5 மற்றும் 6 காலங்கள் மத்திய தாள கட்டமைப்பை உடையது. இது “மத்ய களம்” அல்லது “மத்ய காலம்” என்று கூறப்படும்.

7, 8, 9 மற்றும் 10 காலங்கள் உச்ச பட்ச தாள கட்டமைப்பை உடையது. இது “திருத களம்” அல்லது “திருத காலம்” என்று கூறப்படும். "திஸ்ர" என்றும் கூறப்படுவதுண்டு.

“பதி களம்” முடிய பதினைந்து நிமிடங்கள் வரை பிடிக்கும். நிகழ்ச்சியின் மொத்த நேரத்தை கணக்கிட்டு “பிரமாணி” என்பவர் “பதி களம்” இசைக்கப்படும்போது மொத்த நிகழ்ச்சியின் போக்கை தீர்மானிப்பார். 

நீண்ட தாளங்கள் முதல் அல்லது இரண்டாம் காலத்திலும் குறுகிய தாளங்கள் மூன்றாம் மற்றும் நான்காம் காலத்திலும் தொடங்கும். இந்த காலங்கள் “அடந்த” எனும் தாளத்தில் அமைந்தது என்றாலும் “செம்பட” தாளத்தின் ஆதிக்கம் கடைசி சில தாளங்கள் வரை இருக்கத்தான் செய்கிறது. நிதான கதியில் தொடங்கி துரித கதியை அடையும் இந்த இசை “த்ரிபுட” என்ற தாளத்தை இறுக்கமாக பற்றி கொண்டு இறுதியில் பேரொலி நிலையிலிருந்து இறங்கி ரம்மியமாக நிறைவுறுகிறது. 

பஞ்ச வாத்தியத்தின் இறுதியில் “திமில” கருவிகள் எல்லாம் சேர்ந்து “திமில எடச்சில்” எனும் அருமையான “செம்பட” தாளத்தில் அமைந்த தாள கட்டையை “இளத்தாலம்” உதவியுடன் “வேகம்” “ஒலி” “திறமை” என்ற கூட்டு கலவையாக வழங்குவது அருமையான ஒரு அனுபவம்.  

கேரள மாநிலத்தில் நடைப்பெறும் திருவிழாக்களில் முக்கியமானதான திருச்சூர் பூரம், உத்ராளிக்காவு பூரம், நம்மார வல்லங்கி வேல, சினக்காத்தூர் பூரம், மன்னார்க்காடு பூரம், திருமாந்தான்குன்னு காவு பூரம், அடூர் கஜமேலா, பெருவனம் பூரம், திருஅனந்தபுரம் பைங்குனி (பங்குனி) உத்சவம், வைக்கத்து அஷ்டமி, குருவாயூர் ஏகாதசி போன்ற விழாக்களில் இந்த இசை துறையை சேர்ந்த பல ஜாம்பவான்கள் இசைப்பதை தாங்கள் இறைவனுக்கு செய்யும் இசை காணிக்கையாக கருதுகின்றனர்.

சபரி மலையில் நடைபெறும் கொடியேட்டு, உல்சவம், பைங்குனி (பங்குனி) உத்திரம், பிரதிஷ்டா தினம், நிரபுத்தரி ஆகிய விசேஷங்களில் வாத்திய கலைகளில்  முக்கியமாக கருதப்படும் செம்பட மேளம், பஞ்ச வைத்தியம், செண்டை, தாயம்பக, பாஞ்சாரி, சிங்காரி என பல வகை வாத்தியங்கள் இசைக்கப்படும். இவைகளில் பஞ்ச வாத்தியம், தாயம்பக, ஷோபான சங்கீதம் ஆகியவை முக்கிய இடத்தை பெறுகிறது. பல வருடங்களுக்கு முன் (இப்போது உள்ளதா என்று தெரியவில்லை) சபரி மலை சன்னிதானத்தின் முன் ஷோபான சங்கீதம் இசைப்பவர்கள், நெஞ்சுருகி, கண்ணீர் மல்க பாடும் அந்த சூழல் நெஞ்சுக்கு நெருக்கமானது. 

இந்த கானொளியில் திமிலை வித்துவான் திரு.கோங்காடு விஜயன் (கருப்பு வேட்டியில் இருப்பவர்), எங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு கோயிலில் பஞ்சவாத்தியம் இசைக்கையில் பதியப்பட்டது. என் சிறு வயதில் அவர் திமிலை இசைப்பதையும், அவரது திமிலையை ஆர்வமாய் ஓடிப்போய் தொட்டு பார்த்த அந்த சில வினாடிகள்  இன்றும் மனதில் மறக்க முடியாத பசுமையாய். 
பஞ்ச வாத்தியம் நம் நெஞ்சை நிறைக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக