முன் பதிவுகளில் கூறியது போல், கார்த்திகை, மார்கழி காலங்கள் தென்னிந்தியாவின்
ஆன்மீக நிகழ்வுகளின் காலம் என்று கூறலாம். இந்த இரு மாதங்களும் பலரின் நெஞ்சுக்கு
நெருக்கமானவை. இந்த காலங்களில் தென்னிந்தியாவில் நிகழும் பல ஆன்மீக நிகழ்வுகளில் மிகவும்
பிரபலமானதும், வித்தியாசமானதும் சபரி மலை புனித யாத்திரை ஆகும். இந்த காலங்களில்
சபரி மலைக்கு செல்ல விரதம் இருந்து இரு முடி தலை சுமந்து, பெரும் காட்டு வழிகளை
கடந்து சென்று, ஜோதி வடிவில் ஐய்யப்ப ஸ்வாமியை தரிசித்து பிறப்பறுக்க வரம் கோரும்
(முயற்சி செய்யும்) நிகழ்வு பல்லாண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒன்று. இப்படி பிறவாமை
வரம் கேட்டு செல்லும் அன்பர்களை அந்த கோயிலின் இறைவனின் பெயராலேயே “ஐய்யப்பன்” என்று
அழைப்பது வழக்கமாக உள்ளது. இப்படி பலர் சேர்ந்து செய்யும் ஒரு விசேஷ
பூஜையே இன்று நடைமுறையில் உள்ள “ஐய்யப்பன் விளக்கு பூஜை” ஆகும். இந்த பதிவு அத்தகு சிறப்புடைய “ஐயப்பன் விளக்கு பூஜையை”
குறித்தது.
“ஐயப்பன் விளக்கு பூஜையை” பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் “ஐய்யப்ப ஸ்வாமி” யை
பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம். “ஐய்யப்ப ஸ்வாமி” என்று சொன்னதும் “சூர்பகன்” “மோஹினி
அவதாரம்” “பந்தள ராஜா” “மஹா ராணி” “புலிப்பால்” “சபரிமலை கோயில்” “மகர ஜோதி” “இருமுடி”
“நெய் அபிஷேகம்” என சில வார்த்தைகளில் அடைத்து வசதியாக சொல்லி விடுவது வழக்கம். இவை
எல்லாம் உருவக அலங்கார கதைகளே அன்றி யதார்த்த உண்மை பொருள் ஆக வாய்ப்பில்லை.
இதனால் தானோ என்னவோ “பிறப்பறுப்பு” என்ற உன்னத குறிக்கோள் உடைய அந்த ஆலயம் இன்று தன்னுடைய
பிரதான குறிக்கோளில் இருந்து பிழறி நெடுந்தூரம் சென்று வணிக மயம் ஆகி விட்டது.
இதற்கு பல காரணங்கள் உண்டு. ‘கால மாற்றம்”, “கலாசார மாற்றம்” “மக்களின்
நேர்மையின்மை” “மக்களின் ஆசை மற்றும் சுயநலத்தால் விளையும் பயம்” “நல்ல குருமார்கள்
இல்லாது போதல்” என அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றில் எதுவானாலும், அது அந்த
சமயத்தை வெகுவாக பாதிக்கிறது.
இத்தகு சில தவறான போக்குகளை பற்றிய சரியான புரிதலை உண்டு செய்து, நடைமுறை,
யதார்த்த சிந்தனையை தூண்டும் நோக்கில் பதியப்படுகிறது இந்த பதிவு. அப்புரிதல்
உண்டாவதற்கு நாம் இப்பதிவின் கருவில் இருந்து சற்று விலகி பின்னோக்கி செல்லுதல்
அவசியம் ஆகிறது. விலகி சென்றாலும் விரைவில் திரும்பலாம்.
ஹிந்து மதம் ஒரு மதம் அல்ல
மனித இனம் தோன்றி பல அடுக்கு, பரிணாம வளர்ச்சியை இன்று அடைந்துள்ளது. இந்த
பரிணாம வளர்ச்சி பாதையில் பல விபரீதங்களுக்கு பிறகு, மனிதன் மனிதனாக வாழ வேண்டும்
என்ற நோக்கில் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் சாட்சி நிலையில் இருந்து பார்த்து, ஆய்ந்து,
அந்த நிலைகளுக்கு ஏற்றவாறு வாழ்வியல் கோட்பாடுகளையும், விதிகளையும், சட்ட,
திட்டங்களையும் வகுத்து அதன் மூலம் இயற்கையின் ரகசியத்தை உணர வைக்க ஒரு மார்க்கம்
உண்டாயிற்று. அதன் பெயர் “சநாதன தர்மம்”.
“சநாதனி” என்றால் பிரித்தறிதல் என்றும் “தர்மம்” என்றால் “முறை” அல்லது “வாழ்வியலுக்கான
முறை” என்றும் பொருள் உண்டு. மனித வாழ்வியலுக்கான மற்றும் இயற்கையின் உன்னதத்தை
பிரித்தறிய அடிகோலும் வழிமுறைகள் அடங்கிய இந்த சநாதன தர்மம் பல ஆயிரம் ஆண்டுகளாக
இந்த பூமியின் ஒரு பகுதியில் பின்பற்றப்பட்டும், அதை பின்பற்றிய மனிதர்கள் கலாசார
ரீதியாக மேம்பட்டும், அறிவியல் ரீதியாக பெரிய ஞானம் பெற்றும் இருந்தனர். அவர்கள்
தான் இன்று வரலாறு கூறும் “சிந்து நதிக்கரையில் வாழ்ந்த, அரேபியரால் “அல் ஹிந்த்”
என்றும் ஆங்கிலேயரால் “ஹிந்துக்கள்” என்றும் அடையாளம் காணப்பட்ட மக்கள். “ஹிந்து’
என்ற பெயர் அரேபியர்களும், ஆங்கிலேயர்களும் தங்கள் வசதிக்காக இட்ட பெயர். இன்றைய
ஹிந்து மதம் என்று கூறப்படும் “சநாதன” தர்மத்தை பின்பற்றுபவர்களுக்கு “சநாதனர்”
என்று பெயர் உண்டு. ஒரு விஷயத்தை புரிய வைப்பதில் “எடுத்துக்காட்டுகளும்” “உருவகங்களும்”
பேருதவி செய்கிறது. இந்த நுண்ணிய திறனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்பாக
கையாண்ட ஒரு மார்க்கம் உண்டெனில் அது “சநாதன தர்மம்” என கூறி விடலாம். “சநாதன
தர்மம்” முற்றிலும் அறிவியல் சார்ந்த சிந்தனை உடையது. இதையே
“ஆன்மீகத்தின் அடிப்படை பகுத்தறிவும்,
பகுத்தறிவின் உச்சம் ஆன்மீகம்”
என்றும் என்னுடைய முன் பதிவில்
பதிந்திருந்தேன். இதன் பொருள் ஆன்மீகம் என்பது சநாதன தர்மத்தில் “அறிவியலே” ஆகும்.
அதாவது “நான் யார்” என்ற பகுத்து அறியும் தேடல் மூலம் இந்த பிரபஞ்சத்தின்,
இயற்கையின் பாதையை பின் தொடர்ந்து சென்று, அறிந்து அதன் ஆதி புள்ளி அல்லது சூட்சமம் எது
என்று கண்டு அறிதலே ஆகும். சநாதன தர்மத்தில் இந்த ஆதி புள்ளிக்கு “பிரம்மம்” என்று
பெயர்.
ஒன்றோ அல்லது பல கருத்துக்களை குறித்தோ ஆராய்ந்து அதன் உண்மை பொருள்
கண்டவர்களை “ஞாநி” என்று கூறுவதுண்டு. அப்படி, மேலே சொன்ன பிரம்மத்தை குறித்த ஆய்வை
தொடர்ந்து தெளிவு பெற்றவர்களை “பிரம்ம ஞாநி” என்று அழைத்தனர். இப்போது
புரிந்திருக்குமே சநாதன தர்மம் முற்றிலும் அறிவியல் சார்ந்தது என்று. சில, பலரின்
சுய நல நோக்கினால் சநாதன தர்மம் என்ற இந்த அறிவியல் சார்ந்த மார்க்கம் இன்று
வெறும் “பூச்சாண்டி மதம்” “மூட நம்பிக்கைகளின் குவியல்” என்று தோற்றம் அளிப்பது வேதனைக்குரிய
விஷயம்.
சநாதன தர்மப்படி, ஒரு விஷயத்தை நிர்வகிப்பவர் “சாஸ்தா” என்றழைக்கப்படுகிறார்.
அதன் படி, தர்மங்களை நிர்வகிப்பவர் “தர்ம சாஸ்தா” என்றழைக்கப்படுகிறார்.
“அஹம் பிரம்மாஸ்மி” அல்லது “அண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளது”
என்ற உன்னத அறிவியல் கோட்ப்பாட்டை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உலகுக்கு
எடுத்து சொன்ன மார்க்கம் “சநாதன தர்மம்”. சரி, இந்த அண்டத்தில் உள்ளதை நம்
பிண்டத்தில் எப்படி அறிந்து கொள்வது? அதற்காக “சநாதன தர்மம்” பல வழிகளை
வகுத்துள்ளது. அவற்றில் தலையாயது “ஞான” “கர்ம” “ராஜ” “பக்த” மார்க்கங்கள். இந்த
நான்கு மார்க்கங்களே நம் ஆலயங்களில் சூசகமாக சொல்லப்படும் நான்கு கோபுரம் எனப்படும் பிரம்மத்திற்க்கான
வாயில்கள். எந்த வாயில் வழியாகவும் சென்று பிரம்மம் எனும் கருவறை சூட்சமத்தை
அறியலாம் என்பதன் உருவகமே அது. இந்த நான்கு மார்க்கத்தையும் பற்றி விரிவாக வேறொரு
பதிவில் பார்ப்போம். ஆனால் இந்த பதிவின் கருவாகிய சபரிமலை இந்த நான்கு மார்க்கத்தையும்,
அறிவியல் மூலத்தையும் எப்படி அறிய உதவுகிறது என்பதை பற்றி சிந்திப்போம்.
இங்ஙனம் பல விஷயங்களை நாம் அலசுவது, இவற்றை பற்றி படித்து, சிந்தித்து,
தெளிவடைந்து மற்றவருக்கு விளக்கி “சநாதன தர்மம்” என்ற இக்கால “ஹிந்து மதம்” தன் உயரிய
அறிவியல் பாதையிலிருந்து சுயநல, வியாபார நோக்கங்களுக்காக மூட நம்பிக்கைகளால் நிரப்பப்பட்டு
அதன் விளைவாக “என் கருத்தே பெரிது” என்ற முட்டாள் தனம் வளர்ந்து ஒருவரை ஒருவர் தம்
கருத்துக்காக மாய்த்து சநாதனர் இல்லாது போக கூடாது என்பதற்கான சிறிய முயற்சி.
சபரி மலை, சாஸ்தா, ஐய்யப்பன்
சபரி மலை
சபரி மலை, இன்று வழக்கில் உள்ள ஐய்யப்பன் எனப்படும் மணிகண்டனுக்கு முன்னமே
இருந்த ஒரு மலை என்பதை நான் உணர வேண்டும். இராமனின் காலத்தில் இங்கு வாழ்ந்த “சபரி”
என்ற ஒரு பெண் துறவியின் பெயரால் இந்த மலை அழைக்கப்படுகிறது. சபரிக்கு ஒரு முன்
கதை உண்டு. அவள் பெயரால் அழைக்கப்படுவதற்கு பெரிய காரணம் அவளது யோக ஞானமும்,
பக்தியும் ஆகும். அவள் யோக ஞானத்தில் சிறந்தவளாகவும், பக்தியினால் மிகவும் அடக்கம்
உடையவளாகவும் இருந்ததினாலேயே அவளது புகழ் தொழில் நுட்ப வளர்ச்சியே இல்லாத
அக்காலத்திலும், இன்றைய கேரளாவில் இருந்து பல மைல் தூரத்தில் சரயு நதிக்கரையில் உள்ள
அயோத்யா வரை சென்றடைந்தது. இதன் பொருள் யோகம் என்கிற சுய சோதனையும், அதனால்
கிடைக்கும் ஞானத்தால் செருக்கும் கொள்ளாதிருந்தால் உங்கள் பெயர் உலக புகழ் அடைவதோடு சர்வ வல்லமையுடைய பேரரசர்களும் உங்களை தேடி வருவர் என்பதே.
சாஸ்தா
மேலே குறிப்பிட்டது போல் தர்மத்தை பரிபாலனம் செய்பவர் “தர்ம சாஸ்தா’ ஆகிறார். இந்த
சபரி மலையில் உள்ள ஆலயத்தில் “தர்ம சாஸ்தா” ஆட்சி செய்கிறார். இன்றைய காலகட்டத்து
மொழியில் சொல்ல வேண்டுமானால் ஒரு பெரிய நிறுவனத்தில் பல கிளைகள் இருக்கும்.
ஒவ்வொரு கிளையிலும் ஒரு நிர்வாகி இருப்பார். அந்த நிர்வாகி அந்த கிளையை பொறுத்தவரை
சகல வல்லமை கொண்ட இயக்குனர் அல்லது உரிமையாளரின் பிரதிநிதி ஆக உள்ளார். அந்த கிளையை
பொறுத்தவரை அந்த நிர்வாகி சகல வல்லமை உடையவராக உள்ளார். ஆனால் பெரிய அளவில்
பார்க்கையில் இயக்குனர் அல்லது உரிமையாளரின் பிரதிநிதியாக இருக்கும் அவர்
இயக்குனர் அல்லது உரிமையாளரின் அளவுக்கு வல்லமை இல்லாதவராகிறார் (Branch Manager Vs owner). இது நிகழ்கால
எடுத்துக்காட்டு. இந்த முறையில், இவ்வுலகின் இயற்கை சூட்சுமத்தை உணர்ந்தவரும், அதை
அறிய உதவும் வழி முறைகளை அறிந்தவரும், அந்த வழி முறைகளை யாவரும் சரிவர பின்பற்ற
வைப்பவருமாகிய “ஆதி யோகி” என்றழைக்கப்பட்ட “தர்ம சாஸ்தா” வின் அவதாரம் (representative) தான் இந்த சபரி மலையில் வாசம் செய்த “தர்ம
சாஸ்தா”. பல கால கட்டங்களில், பல “தர்ம சாஸ்தா” உருவெடுத்தே இருந்துள்ளனர்.
ஐய்யப்பன்
“ஐய்யப்பன்” என்பது விளிப்பெயரே அன்றி நிஜப்பெயர் அல்ல. அதே போல் மணி கண்டன்
என்பதும் பிற்காலத்தில் வழங்கப்பட்ட உருவகப்பெயரே அன்றி உண்மை பெயர் அல்ல. ஐயப்பன்
என்ற பெயருக்கு “அய்யா” “அப்பன்” என்ற
பொருள் உண்டு. நம் கலாச்சாரப்படி, மதிப்பிற்குரிய ஒருவரை நாம் அவர் பெயரிட்டு
அழைப்பதில்லை. மாறாக "அய்யா" “அய்யன்” என்றும் “அப்பன்” “அப்பா” என்றும்
அழைப்பதுண்டு. மேலும் தொழில் ரீதியாகவும் அழைப்பதுண்டு. உதாரணத்திற்கு “சேகர்”
என்பது ஒருவரது பெயர். அவர் “தாசில்தார்” என்ற பதவியில் பல காலம் இருந்ததால் “தாசில்தார்”
எனவும் “தாசில்தார் சேகர்” எனவும் பெயர்மாற்றம் பெறுகிறார். அது போலவே “தர்மத்தை
சாஸ்த்துவம்(பரிபாலனம்)” செய்பவர் ‘தர்ம சாஸ்த்தா” என்று அழைக்கப்படுகிறார்.
அதுதானே சரியாகும்!. அப்படி என்றால் இப்போது வணங்கப்படும் “ஐய்யப்பன்” யார்?
தர்மத்தை சாஸ்தவம் அதாவது நிர்வாகம் செய்யும் பணியில் பலர் உண்டு. அதில்
ஒருவர்தான் “ராஜன்” அல்லது “அரசன்”. இதனால் தான் அரசனை இறைவனுக்கு நிகராக
கண்டார்கள். அதாவது “தர்மத்தை நிலை நாட்டுபவன்”. அந்த அரசனுக்கான பல விதி முறைகள் சநாதன
தர்மத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் தலையாயது “மக்களுக்கு சேவை செய்தல்”.
அந்த சேவைக்காக அவ்வரசன் எதையும் செய்ய துணிந்தவனாகிறான். அப்படித்தான் பாண்டிய நாட்டை ஆண்ட சேகரன்
(ராஜ என்பது அடை மொழி) என்னும் மன்னன் தன் ராச்சியத்தின் பகுதிகள் தீயவர்
ஆளுகையில் இருப்பதையும் அதை தடுக்க தன்னால் இயலவில்லை என்பதால், அதற்காக ஒரு
வல்லமை உள்ள சக்தி வேண்டும் என வேண்டி மணி கண்டனை கண்டெடுக்கிறான். அவனுக்கு அரசன்
ஆவதற்கான எல்லா வித்தைகளும் கற்று
கொடுக்கப்படுகிறது. கலைகளோடு, இயற்கை சூட்சுமத்தை உடல் வழியே அறியும் யோக கலையும் கற்று
கொடுக்கப்படுகிறது.
கல்வியில் சிறந்த மணிகண்டன் தன் தந்தையின் வேண்டுக்கோள் படி, தீயவரை
வெல்லவும், தன் வளர்ப்புத்தாயின் நோய் நீங்க மருத்துவ விதிகளுக்கு ஏற்ப “புலிப்பால்”
கொண்டு வரவும் காட்டிற்கு செல்கிறான். தன் குருமார்களின் வழிக்காட்டுதலில் இயற்கை
சூட்சுமத்தை அறியும் வழியை அறிந்த மணிகண்டன் அவ்வழியின் இறுதி நிலையாகிய பிறப்பு
அறுத்தலை செய்ய விழைகிறான். இந்த மூன்று விஷயங்களின் உருவக கூட்டு கலவையே இன்றைய சபரி
மலை யாத்திரை.
இதை ஏன் கூறுகிறேன் என்றால், மணிகண்டனின் காலத்திற்கு முன்பே இந்த மலை
குறித்தும், அங்கிருந்த சாஸ்தா ஆலயம் குறித்தும் கந்த புராணம் முதற்கொண்டு யுவான்
சுவாங் எழுதிய பயண குறிப்பேடு வரை பல சான்றுகள் உண்டு. உதாரணத்திற்கு, யுவான்
சுவாங் எழுதிய பயண குறிப்பேட்டில் இப்போதைய சபரி மலை பகுதியை (வேறு பெயரில்) குறிப்பிட்டு அங்கு ஒரு “புத்தன்”
ஆலயம் இருந்ததென்றும், அங்கு வழிபட நிறைய மக்கள் சென்று வந்தனர் என்றும், அந்த
யாத்திரையில் பலர் மரணம் அடைந்தனர், இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மக்கள்
செல்லத்தான் செய்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளான்.
சநாதன தர்மத்தில் “புத்தன்” என்றால் ஞானம் நிறைந்தவன், “ஞாநி” என்ற பொருளும்
உண்டு. இப்பொழுது வணங்கப்படும் “கௌதம புத்தர்” புத்தர்களின் வரிசை கிரமத்தில் இருபத்தி எட்டாவது
புத்தர் ஆவார். புத்தம் என்பது ஞானத்தின்
தேடலுக்கான ஒரு வழியே அன்றி தனி மதமாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் சபரி
மலைக்கு இன்றளவும் உள்ள விதி முறைகளை நடைமுறை வழக்கில் (practical
approach) ஆராய்ந்தால் தற்பொழுது உள்ள புத்த மதத்தின் கோட்பாடுகளோடு ஒத்துப்போகும்.
கௌதமன் மற்றும் அவனுக்கு முன் இருந்த புத்தர்கள் பின்பற்றிய மார்க்கத்தின்
பிறப்பிடம் எது, பின்பற்றிய வழிமுறைகள் யாதென்ற ஆராய்ச்சி நமக்கு இங்கு
வேண்டியதாகிறது. மேலும் சொல்ல வேண்டுமானால் “ஐய்யப்பன்” பூஜைகளில் யோக கலையின் முக்கிய அம்சமான மூச்சு பயிற்சியின் ஒரு பகுதியான “தர்ம சாஸ்த்தா அஷ்டோத்திரம்" (நூற்றியெட்டு) மற்றும் "சஹஸ்ர நாமம்" (ஆயிரத்தெட்டு) ஆகியவற்றில் “மஹா புத்தாய நம:”
என்று சொல்வதுண்டு. இது ‘புத்தரை” குறிப்பதன்று. மாறாக “பெரிய ஞானியே” என்ற
பொருளில் ஆனது. சரி, சபரி மலை என்ற பகுதியில் “புத்தன்” ஆலயம் என்கிற “சாஸ்தா”
ஆலயம் இருந்தது என்று நாம் உறுதி கொள்வோம். அதற்கும் சபரி மலைக்கும், சபரி மலை
யாத்திரைக்கும், இப்பொழுது நடை முறையில் உள்ள ஐய்யப்ப விளக்கு பூஜைக்கும் என்ன
தொடர்பு? பார்ப்போம்.
சபரி மலை, சாஸ்தா ஆலயம் என்றும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் இந்த சாஸ்தாவின்
பக்தன் என்றும், அவனது வளர்ப்பு மகன் என்று சொல்லப்படும் “மணி கண்டன்” என்பவன் சகல
வித்தைகளையும் கற்று, யோக வித்தைகளையும் கற்று தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை
நிறைவேற்ற புறப்படுகிறான் என்பதில் எந்த வித உருவகமும் இருக்க வாய்ப்பில்லை. சரி.
அப்படி புறப்படும் சிறுவன் தனியே செல்ல இயலுமா?இயலாது. எனவே, தான் வித்தை பயின்ற “ஆலங்காடு”
“அம்பலப்புழை” ஆகிய பள்ளிகளில் இருந்தும், தன் அரசனிடமிருந்தும் படையை
திரட்டுகிறான். எல்லா வீரர்களும் ஒன்று திரட்டப்படுகிறார்கள். அவர்களை வழிநடத்த
இரு படை தளபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இரு தளபதிகளும் “வெளிய கடுத்த”
(பெருஞ்சிருத்தை) “கொச்சு கடுத்த” (சிருஞ்சிருத்தை) என்று அழைக்கப்படுகிறார்கள்.
இன்றும் நம் படைகளில் முக்கியமாக உள்ளவர்களை, சுபேதார், கர்னல், கமாண்டர், சோல்ஜர்
என்று ஆங்கிலேய மொழியில் அழைத்து பெருமைப்பட்டு கொள்கிறோமே அதைப்போல!. படை
திரட்டப்பட்டு, போர் வியூகங்கள் வகுக்கப்படுகிறது. மலை பிரதேசம் ஆதலால் ஒவ்வொரு
மலைக்கும், அந்த மலையை குறித்து நன்கு அறிந்த ஒரு தளபதி அந்த மலையின் பெயரால் (தலைச்சேரி
முண்டன், கரிமல முண்டன், தலைப்பார முண்டன் என) போர் விதிப்படி அடையாளம்
காணப்படுகிறார்கள். இதில் "கரி" என்கிற கொடிய யானைகளை கொண்ட கரிமலைக்கும், அதன் தளபதியான கரிமல முண்டனுக்கும் சில சிறப்புகள் உள்ளதாக "தாளியோல" எனப்படும் "ஓலைசுவடியில்" குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் யாவரும் மணிகண்டனை போல் பல வித்தைகள் மற்றும் போர்க்கலையை
கற்றவர்கள் ஆனால் யோகக்கலையில் சிறந்தவர்கள் அல்லர்.
வகுக்கப்பட்ட போர் வியூகங்கள் வெற்றி பெற பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனைக்கான
நாள் குறிக்கப்படுகிறது. படை வீரர்கள் ஒன்று சேர பக்தியுடன் பூஜையும் பிரார்த்தனையும்,
அதே நேரத்தில் கலாச்சார வெளிப்பாடாக கலை நிகழ்சிகளும் நடை பெறுகிறது. அது “சாஸ்தா
விளக்கு” அல்லது “சாஸ்தா விளக்கு பூஜை” என்று அழைக்கப்படுகிறது.
சரி, இது வரையில்
சொல்லப்பட்ட நிகழ்வுகள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட கட்டு கதைகள் போல் இருந்திருக்க
வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அப்படி குழப்பமோ, கருத்து மாற்றமோ இருந்தால் வழக்கம் போல்
செய்தி அனுப்புங்கள். அலசுவோம். ஐயமற ஆராய்வோம்.
சாஸ்தா விளக்கு பூஜையை குறித்து
வரும் பதிவில் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக