ஞாயிறு, 28 டிசம்பர், 2014

ஐய்யப்பன் விரும்பிய கன்னி ஸ்வாமி

ஐய்யப்பன் விரும்பிய கன்னி ஸ்வாமி

கார்த்திகை மார்கழி மாத காலங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், முக்கியமாக தென் இந்தியாவில் இருந்து பலர் சபரி மலைக்கு செல்ல வேண்டி மாலை அணிந்து, ஒரு மண்டல விரதம் இருந்து, இருமுடி சுமந்து, காடு, மலை ஏறி தரிசனம் செய்து, நெய் அபிஷேகம் செய்த மன நிறைவுடன் திரும்புவது வழக்கம். இப்படி சபரி மலை செல்பவர்களில் முக்கியமானவர்கள், முதல் முறையாக செல்லும் “கன்னி ஸ்வாமி” எனப்படுபவர்கள். அப்படி முதல் முறையாக வரும் “கன்னி ஐய்யப்பன்” ஸ்வாமிகளை சபரி மலை ஐய்யப்பனுக்கு மிக பிடிக்கும் என்பது ஐதீகம்.

அப்படி சபரி மலை செல்ல மாலை அணிந்து, ஒரு மண்டல விரதம் இருந்து, இருமுடி எடுத்து, மலை ஏறி சென்று ஐய்யப்பனை தரிசிக்க ஆசையோடு ஒரு கன்னி ஸ்வாமி தயாரானார். இவரை போல கள்ளங்கபடம் இல்லாத ஒரு கன்னி ஸ்வாமி இது வரை சபரி மலைக்கு சென்றதே இல்லை. மற்றவர்களைபோல் மனதில் எந்த விதமான சுய நல சிந்தனையும், பிரார்த்தனையும் இல்லாமல், அமைதி, ஆனந்தம், அடக்கம், ஐய்யப்ப தரிசனம் போன்ற உயர் நிலை எண்ண அலைகளோடு புறப்பட தயார் ஆனார் இந்த கன்னி ஐய்யப்பன்.

இந்த கன்னி ஸ்வாமி ஒன்றும் தானாக சபரி மலைக்கு போக வேண்டும் என ஆசைப்படவில்லை. ஐய்யப்ப ஸ்வாமிக்கு மட்டுமே உரித்தான சில கடமைகளை செய்ய இவரை போன்றோர் தேவை என “திருவிதாங்கூர் தேவஸ்வம்” போர்ட் விளம்பரம் செய்ததை அடுத்து இவரால் அதை செய்ய முடியும் என்ற மற்றவரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேறு வழியின்றி தானும் ஆசைப்பட்டு விட்டார். இதில் என்ன தவறு?

இவர் சபரி மலை செல்ல தயார் ஆனதை அந்த ஊரே வரவேற்றது. என்னைப்போல சிலரும் வாழ்த்தினர், ஆனந்த கண்ணீர் சொரிந்தனர். தம்மால் இயன்ற உதவிகளை செய்தனர். ஏனென்றால், இந்த கன்னி ஸ்வாமி சபரி மலை செல்ல பல விதமான வசதிகள் தேவைப்பட்டது. நிறைய பணம் தேவைப்பட்டது. 

பணம் ஒரு விஷயமே அல்ல,  “நீ செல்வதானால் நான் என் சொத்தையே தருகிறேனடா” என்று வரிந்து கட்டிக்கொண்டு பலர் வந்தனர். இப்படி வந்தவர்களில் ஹிந்து, கிறிஸ்தவ, இசுலாமிய மக்களும் அடக்கம். அவர்கள் இதை ஒரு மதம் சார்ந்த விஷயமாகவே காணவில்லை. மாறாக, அவன் மீது தமக்கிருந்த காதலால், பாசத்தால், உரிமையினால் மற்றும் அதை செய்வது தங்கள் கடமை என செய்ய நினைத்ததால் செய்தனர்.

ஆனால் இந்த அன்பு எல்லார் மனத்திலும் இருக்க வேண்டும் என்பது நியதி அல்லவே. அங்கும் தன் மிருக, வக்கிர புத்தியை காண்பித்தது சில மனிதம்.

அவன் வரக்கூடாது, அவன் வந்தால் நாங்கள் என்னாவது? அவன் விளம்பர பிரியன். அதனால் தான் அவனது சபரி மலை யாத்திரை இவ்வளவு விளம்பரப்படுத்தப்படுகிறது என்றெல்லாம் சொல்லி அவன் செல்வதை தடுக்க நினைத்த அற்ப மனித பதர்களின் சூழ்ச்சியை அவன் அறியாதே இருந்தான். பாவம் அவன். எப்படியாவது சபரி மலைக்கு சென்று விடவேண்டும் என்று விரும்பினானோ என்னவோ தெரியவில்லை, தன்னை பற்றியும், தன் மனம் பற்றியும் ஏசுபவர்களை குறித்து ஒன்றும் சொல்லவும் இல்லை, ஒன்றும் செய்யவும் இல்லை. அவனை ஏதோ பெரிய தீவிரவாதி, மற்ற உயிர்களுக்கு ஆபத்தானவன் என்பது போல ஒரு பத்திரிகை காரன் சீறினான். பிறகு தான் தெரிந்தது, தற்காலத்து பத்திரிகை தர்மம் போல அவன் கட்டுரைக்கு பின்னும் அவனது சொந்த விருப்பு வெறுப்பு கலந்தே இருந்தது என்று. 

பத்திரிகை செய்தி வந்தாலே போதும் கேரள மக்கள் “அர்த்தால்” “பந்து” என்று தொடங்கி விடுவார்கள், நம் வேலை சுலபமாக முடிந்து விடும் என்று நினைத்த “தேவஸ்வம் போர்டு” அமைப்பின் சில உறுப்பினர்களின் எண்ண எதிர்ப்பார்ப்பு தவிடுபொடி ஆனது. பொது மக்கள் போராடுவர், ஆனால் அந்த போராட்டத்தில் தமது மனதையும் கலப்பர் என அந்த உறுப்பினர்கள் எண்ணி இருக்கவில்லை. வேறு வகையில் அவனது யாத்திரையை முடக்க நினைத்தனர். அவன் வர கூடாது. வந்தால் கைது செய்யப்படுவான். ஏற்படப்போகும் அசம்பாவிதங்களுக்கு “தேவஸ்வம் போர்டு” பொறுப்பேற்காது என மார் தட்டி மிரட்டி கடிதம் அனுப்பியது. என்னவோ எல்லா விஷயத்திலும் வேண்டிய நடவடிக்கை எடுத்து விட்டதை போல ஒரு எண்ணம் இந்த தேவஸ்வம் போர்டு உறுப்பினர்களுக்கு.

அவன் சபரி மலை யாத்திரை போக வேண்டும் என ஆசை கொண்டவர்கள், “தேவஸ்வம் போர்டு” உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார்கள். அதில் அவன் தரிசனம் மட்டும் செய்து விட்டு திரும்ப அனுமதிக்குமாறும், அவன் யார் வம்புக்கும் தும்புக்கும் போக மாட்டான். அதற்கு நாங்கள் பொறுப்பு என்றும் கூறுகின்றனர். அதற்குள் விஷயம் ஊர் முழுதும் தெரிந்து விட்டது. இதற்க்கு மேல் நாம் அனுமதிக்கவில்லை என்றால் நம் முதுகு தோலை பொது மக்கள் பிய்த்து விடுவர் என உணர்ந்து கொண்டு தேவஸ்வம் போர்ட் உறுப்பினர் எனும் மனித சமுதாய மஹா மேதைகள், மனம் கனிந்து “சரி” என்கிறார்கள். இந்த செய்தியை கேட்டும் அவன் துள்ளி குதிக்கவில்லை, ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இவ்வளவு ஏன்? அவனுக்கு இந்த செய்தியை குறித்து தெரியவே தெரியாது. அவ்வளவிற்கு நல்லவன் அவன்.

ஒப்புதல் கிட்டியதை ஒட்டி நம் கதாநாயகன் சபரி மலைக்கு மாலை அணிகிறான். ஒரு மண்டலம் நோன்பு இருக்கிறான். சபரி மலைக்கு இருமுடி ஏந்தி செல்லவும் தயார் ஆகிறான். ஓ. இன்னும் கதா நாயகனை அறிமுகம் செய்யவில்லையா. இதோ.

இவன் பெயர் “சிறக்கள் மஹாதேவன்”. நிறம் கருப்பு. உயரத்திலும் பருமனிலும் அனைவரையும் கொள்ளை கொள்ளும் அழகு உடையவன்.

“சிறக்கள் மகாதேவன்” இருமுடி கட்ட கேரள மாநிலத்தில் உள்ள “திரு ஷிவ பேரூர்” எனப்படும் “திருச்சூர்” ஜில்லாவில் உள்ள அவனுக்கே பிரியமான “திருவம்பாடி” கோயிலுக்கு வருகிறான். “சபரி மலை” கோவிலில் ஐய்யப்பனை பூஜை செய்த “மூத்தேடுத்த சுகுமாரன் நம்பூதிரி” அவர்களின் திருக்கரங்களால் அவனுக்கு விரத மாலை அணிவிக்கப்பட்டு “மஹா தேவனின்” நெய் தேங்காய் நிரப்பப்படுகிறது.

இருமுடியை தலையில் வாங்கி தனது முதல் யாத்திரையை “மஹா தேவன்” தொடங்கி விட்டான். நேராக “வடக்கும்நாதன்” கோவிலுக்கு செல்கிறான், அங்கு கோவிலின் நாயகன் இல்லை. எனவே அடுத்துள்ள “பாரமேக்காவு” எனும் கோவிலுக்கு சென்று தொழுகை நடத்துகிறான். இந்த கோவிலின் பல போட்டிகளில் வென்றவன் அவன். “வடக்கும் நாதனின்” சொந்த குழந்தையாக வளர்ந்தவன், அவரிடமிருந்து ஒரு பிடி சோறு வாங்கி உண்ணாமல் சென்றால் அது சரி ஆகாது என்பதால் காத்திருக்கிறான் இரவு வரை. அவன் விரும்பியபடியே, வடக்கும்நாதன்  உண்ட சோறின் பாக்கி அவனுக்கு கிடைக்கிறது. சந்தோஷமாக உண்டு சற்றே ஓய்வெடுத்து மீண்டும் தனது யாத்திரையை தொடுங்குகிறான் “மஹா தேவன்”.

பலசாலி தான். ஆனாலும் நெடுந்தூரம் அவனால் நடக்க முடியாது என்பதால் ஒரு வண்டியில் ஏறி பயணத்தை தொடர்கிறான் மஹாதேவன். கன்னி சாமி ஆயிற்றே! எருமை கொல்லி மலையில் சென்று தர்ம சாஸ்தாவை, வாபரனை வணங்கி பேட்டை துள்ளி செல்ல வேண்டும் ஆதலால் அங்கு சென்று, குளித்து வணங்கி யாத்திரையை தொடர்கிறான். பல கோடி கன்னி ஐய்யப்ப சுவாமிகளை கண்ட எருமை கொல்லி மலை மக்களுக்கு ‘மஹா தேவனின்” சபரி மலை யாத்திரை ஒரு புது வித அனுபவம் ஆகிறது. அவர்கள் மனம் மிகுந்த சந்தோஷம் அடைகிறது. தன்னால் இயன்றவாறு பேட்டை துள்ளி தனது பயணத்தை தொடர்கிறான் மஹாதேவன்.

பம்பையில் வந்து, ஒரு சுகமான குளியலை போட்டு, மலை ஏற வேண்டும் என்பதால், ஏதோ கொஞ்சம் உணவை வயிற்றுக்குள் தள்ளி, தனக்கு பிரியமான கணபதி பகவானுக்கு ஒரு வணக்கத்தை வைத்து நடக்க தொடங்குகிறான். “நீலி” என்பவளின் பெயரால் அறியப்படும் அந்த நீலி மலை, மஹாதேவன் ஏறாத ஒரு மலை. என்னதான் பலசாலி ஆனாலும் சற்று திக்கு முக்காடித்தான் போனான். யார்தான் அந்த மலையில் நின்று மூச்சு வாங்காமல் ஏறி இருக்கிறார்கள்? எப்படியோ, எல்லாரையும் போல் மூச்சு முட்ட முட்ட மலை ஏறி வந்துவிட்டான் மஹா தேவன்.

பதினெட்டாம் படியின் முன் வந்து நின்றவனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. அவனை தரிசனம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு ஒரு சில தேவஸ்வம் போர்டு ஊழியர்கள். உண்மையான காரணத்தை நேருக்கு நேர் பேசினால், தங்களின் குட்டு வெளியாகிவிடும் என்பதால், முகம் காட்டாமல் ‘கட்ட பஞ்சாயத்து” செய்கிறார்கள். வெட்கம் கெட்ட மனிதம். பல மணி நேரம் அந்த பதினெட்டாம் படியின் முன் நிற்கிறான் மஹா தேவன். அவனுக்கு தெரியும், பதினெட்டு படி மேல் உள்ள தனது நாதனுக்கு தன்னை காண, தனக்கு தரிசனம் தர மிகுந்த ஆர்வம் என்று. ஆனாலும் இந்த அதிகார மிருகங்கள் விடவில்லை.

பல மணி நேர காத்திருப்புக்குப்பின், மஹா தேவன் கொண்டு வந்த இருமுடி வேறு ஒரு நபர் மூலமாக பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.

அந்த நெய் அபிஷேகம் செய்யும்போது, நெய் அபிஷேகம் செய்யும் நம்பூதிரியின் கண்களோடு சேர்ந்து அந்த ஐயப்பனின் கண்களும் கலங்கி இருக்கும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.

அப்படியாக ஒரு கன்னி ஸ்வாமியின் சபரி மலை யாத்திரை ஐய்யப்பனை காணாமலேயே முடிவுற்றது. 

ஆனால் ஐயப்பனுக்கோ, இது வரை வந்த சுவாமிகளை விட, வரப்போகும் சுவாமிகளை விட, மஹா தேவனை தான் மிகவும் பிடிக்கும். அவனிடம் ஜாதி, மத, ஏழை, பணக்கார, நல்ல, கெட்ட, எனது, உனது என்ற எந்த வித இருமையும் இல்லையே! பிறகு அவனை எப்படி பிடிக்காமல் போகும்.

மஹா தேவன் காத்து நின்ற இரண்டு மணி நேரமும் அந்த ஐய்யப்பன்  தன் இருப்பிடத்தில் இருந்து இறங்கி வந்து மஹா தேவனை ஆரத்தழுவி இருப்பான். அது மட்டும் நிச்சயம்.

அது உண்மையான பக்தனுக்கும், பகவானுக்கும் இடையில் மட்டுமே நடக்கும் காதல். மிகவும் பரஸ்பரமானது. மற்றவர்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை.


மஹா தேவனின் சபரி மலை யாத்திரையின் காணொளியை காண கீழே சொடுக்குக.






 மஹா தேவனின் உணர்வுகளில் மூழ்கி.............


புதன், 24 டிசம்பர், 2014

ஐய்யப்பன் விளக்கு பூஜை – இறுதி பாகம்

ஐய்யப்பன் விளக்கு பூஜை




மணிகண்டன் எதிரிகளை அழிக்க, புலிப்பால் எடுக்க, பிறப்பறுக்க என்ற மூன்று இலட்சியங்களுடன் சபரி வனம் செல்ல தீர்மானித்து, யுத்த வியூகங்கள் வகுத்து அவை வெற்றி பெற “தர்ம சாஸ்தாவை” தியானித்து “சாஸ்தா விளக்கு” பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன் நினைவாகவே “சாஸ்தா விளக்கு” இன்று “ஐய்யப்பன் விளக்கு” என்று அனுஷ்டிக்கப்படுகிறது.

சற்று நிகழ்கால வழக்கோடு விளங்கி கொள்ள முயலுவோம். குரு ஸ்வாமி (மணிகண்டன்) தன் சீடர்களாகிய ஐய்யப்ப பக்தர்களுடன் (படை வீரர்கள்) பிறப்பறுத்தல் நோக்குடன் சபரி மலைக்கு செல்ல தொடங்கும் யாத்திரைக்கான பிரார்த்தனை இந்த சாஸ்தா விளக்கு. மணிகண்டனுக்கு மூன்று நோக்கங்கள் இருந்தது ஆனால் இன்று அந்த முதல் இரண்டு நோக்கங்கள் நமக்கு அவசியம் ஆகவில்லை. எனவே மூன்றாம் நோக்கமாகிய “பிறப்பறுத்தல்” பிரதானமான லட்சியமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த பூஜை மணிகண்டன் செய்த போது எப்படி செய்திருக்க கூடும் என்பதை நம் உள்ளுணர்வால் உணரும் வகையிலும் அதே பூஜை இன்றளவில் எப்படி செய்யப்படுகிறது என்பதையும் ஒரு சேர அறிவோம்.

சாஸ்தா விளக்கு

சாஸ்தா விளக்கின் முக்கிய தர்மம் “காலை முதல் காலை வரை” என்பதே. “உதயம் முதல் உதயம் வரை”.

சாஸ்தா விளக்கு பூஜைக்கு முக்கியமானவர், இந்த பூஜையை நடத்தி தரவேண்டிய “மாபதி” எனப்படும் குருநாதர் ஆகிய ஆசான். மணிகண்டன் இந்த பூஜையை செய்ய எண்ணி தம்  களரி ஆசானை மரியாதை செய்து அழைக்கிறார். ஆசான்,  மணிகண்டன் அழைப்பை ஏற்று பூஜை செய்ய வேண்டிய முறையையும், அதற்கு தேவையான பொருட்கள் குறித்தும், அதன் தொடர்பான விரத முறைகளை  போதிக்கிறார். இன்று நடக்கும் பூஜைகளை செய்ய பல குழுக்கள் உள்ளது. அதற்கு ஆசான் உள்ளார். அவரை அணுகி நம் விருப்பத்தையும் இடம், நாள், நேரம் சொல்லி அவர் ஒப்புதல் பெற்று அவரிடம் இருந்து தேவையான பொருட்கள் பற்றிய விவரங்களை குரு ஸ்வாமியோ அல்லது பெரிய ஸ்வாமியோ பெறுகிறார்கள்.

பூஜையின் முன் நாள் இரவு கலை வித்தகன் ஆன “மாபதி” எனும் ஆசான் மற்றும் அவரது சீடர்கள் மணிகண்டன் மற்றும் அவனது படை நடத்த போகும் போருக்காக விசேஷமாக செய்யப்பட ஆயுதங்களையும், உபகரணங்களையும், போர் வெற்றி பெற தாம் பூஜித்து ஆராதிக்கும் “தர்ம சாஸ்தா” வின் உருவத்தையும், சாஸ்தா விளக்கு பூஜை நடக்கும் இடத்திற்கு கொண்டு வருகிறார். மணிகண்டன், தன் படை, உற்றார், உறவினர் எல்லோரும் ஒரு சேர மரியாதையும் பக்தியும் சேர்ந்து “மாபதி” அவர்களின் பாதங்களை கழுவி வரவேற்று மரியாதை செய்கின்றான். இந்த நிகழ்வு “மாபதி வரவேல்ப்பு” என்று அழைக்கப்படுகிறது. மாபதி எனப்படும் ஆசான் மணிகண்டனின் களரியில் வந்து மறுநாள் காலை தொடங்க வேண்டிய பூஜைக்கான ஏற்பாடுகளை செய்கிறார்.











பூஜை நடக்க வேண்டிய பந்தலுக்கு, முதல் கால் நடுவதும் மற்றும் பந்தலுக்கு உள்ளே செய்யப்போகிற அம்பல வடிவங்களுக்கு வரைபடம் வைக்கவும் செய்கிறார் ஆசான். இந்த நிகழ்வு “களம் ஒருக்கள்” அல்லது “பத்மமிடல்” என கூறப்படுகிறது. களம் ஒருக்கள் நிகழ்ச்சியின் முக்கிய வடிவாக பந்தலின் முதல் கால் மற்றும் அம்பலம் உண்டாக்க வேண்டிய வாழை மரத்தூண் இரண்டையும் மணிகண்டன் கையால் ஊன்றப்படுகிறது. இந்த நிகழ்வின் போது விளக்கு ஏற்றப்பட்டு, நுனி வாழை இலையில் நெல், தேங்காய், தானிய விதைகள், துளசி இதழ்கள் வைத்து ஆசானுக்கு காணிக்கையாக ஒரு தங்க காசு வைக்கப்படுகிறது. இன்று ஒப்பந்த தொகையாக  நிர்ணயிக்கப்படுவதால் 11,21,51,101 ரூபாய் என அவரவர் வசதிக்கு ஏற்ப “குரு தக்ஷிணை” என்ற பெயரில் தரப்படுகிறது. பந்தல் எழுப்பப்பட்டு கூரை வேயப்படுகிறது. பந்தலானது சதுர அல்லது செவ்வக வடிவில் அமைக்கப்படுகிறது. பொது பூஜை, பிரார்த்தனை என்பதால், அவசியம் முடிந்து அகற்றக்கூடியதும், அந்த கால சம்பிரதாயமும், தம் சிற்ப கலையை வெளிப்படுத்த ஏதுவாக வாழை மர பட்டை, தென்னங்கீற்று, மூங்கில் குச்சிகள் மற்றும் வாழை தண்டுகள் கொண்டு அம்பல வடிவங்களை உருவாக்குகிறார்கள். விடிவதற்குள் அம்பலம் தயாராகி விட்டது.

இன்றைய கால கட்டத்தில் இந்த அம்பல வடிவங்கள் மாற்றம் அடைந்துள்ளன. அம்பலம்  செய்யும் முறையில் ஒவ்வொரு களரி ஆசானும் தன் சிற்ப கலையின் சிறப்பை வெளிக்கொணர முயற்சிப்பார். பிற்காலத்தில் சாஸ்தா விளக்கு பூஜையானது   கால், அரை, முக்கால், முழு விளக்கு என வகைப்படுத்தப்பட்டது. வகைக்கேற்ப அம்பலங்களின் எண்ணிக்கை 1,3,5,7 என கூடியது. சாஸ்தாவை பூஜித்த ஐயப்பனை மனிதர்கள் பூஜிக்க தொடங்கியபோது, ஐயப்பனுக்கும், அவனது பரிவாரங்களுக்கும் அம்பலங்கள் எழுந்தன. ஆனால் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

ஐயப்பனுக்கு (சாஸ்தா) மட்டும் அம்பலமும், பரிவாரங்களுக்கு பீடமும் வைத்து செய்யப்படும் பூஜை “கால் விளக்கு” என்றும், ஐயப்பன் (சாஸ்தா), தேவி, வாபரன் ஆகிய மூவருக்கும் அம்பலம் அமைத்து செய்யப்படும் பூஜை ‘அரை விளக்கு” என்றும், ஐயப்பன் (சாஸ்தா), தேவி, வாபரன், வலியகடுத்த (பெருஞ்சிருத்தை) என அறியப்படும் கரிமலை முண்டன் ஆகிய கரிமல மற்றும் கொச்சு கடுத்த (சிருஞ்சிருத்தை) ஆகியோருக்கு அம்பலமும் வைத்து செய்யப்படும் பூஜை “முக்கால் விளக்கு” என்றும், மேற்சொன்ன ஐந்து அம்பலங்களுடன் கணபதி (விநாயகன்), சுப்ரமண்யன் (முருகன்) ஆகியோருக்கு அம்பலமும், சுற்று சுவரும் எழுப்பி செய்யப்படும் பூஜை “முழு விளக்கு” என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. செய்யும் விளக்கு பூஜையின் அளவிற்கேற்ப பீடங்களின் எண்ணிக்கை 9,11,13 என வேறுபடுகிறது. இதை ஆசான் நிர்ணயிக்கிறார். அம்பலம் பூர்த்தி செய்யப்பட்டு, கலை வேலைப்பாடுகள் நிரம்ப சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு ஜொலிக்க வைக்கப்படுகிறது. இங்கு ஆசான் மற்றும் அவரது சீடர்களின் சிற்ப திறமையும் அலங்கார கலை திறமையும் வெளிப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட அம்பலம் மணிகண்டனிடம் பூஜைக்காக ஏற்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு “ஏட்டு (ஏற்று) வாங்கல்” எனப்படுகிறது.


சாஸ்தா விளக்கு அனுஷ்டிக்கப்படும் தினம் பிரம்ம யாமத்தில் களரி ஆசான், சீடர்கள், மணிகண்டன், படை வீரர்கள் அனைவரும் குளத்தில் குளித்து பூஜைக்கு தயாராகின்றனர். களரி ஆசான் ஆசீர்வாதத்துடன் மணிகண்டன் மற்றும் படை, தங்கள் திட்டம் நிறைவேற குல தெய்வத்தையும், தடைகள் அகல விநாயகனையும் வணங்குகின்றனர். இன்றளவும் சாஸ்தா விளக்கின் ஆரம்பம் இப்படித்தான் உள்ளது.

(ஒரு யாமம் என்பது மூன்று மணி நேரம் ஆக கணக்கில் கொள்ளப்பட்டது)

முதல் யாமம்

பிரம்ம மூகூர்த்த வேலையில் “தர்ம சாஸ்தாவை” “குடியிருத்தி பூஜா” என்ற ஆசாரப்படி மனதில் தியானித்து வாழை மர அம்பலத்துக்குள் இருக்கை தந்து அமர செய்கிறார் ஆசான். “தர்ம சாஸ்தா” வை குடியிருத்தும்போது, கூடவே அவரது ஆயுதங்கள் சேர்த்து அவரது பரிவாரங்களையும் குடியிருத்துகிறார். இந்த நேரத்தில் தொடங்கி “சாஸ்தா விளக்கு” முடியும் வரை ‘உடுக்கு பாட்டு” எனப்படும் “சாஸ்தாம் பாட்டு” அந்தந்த நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு இசைக்கப்படுகிறது.

இரண்டாம் யாமம்

சாஸ்தாவை குடியிருத்தி, உப தேவதைகளையும் பீடத்தில் இருத்தி, எல்லாவரும் சுற்றி வந்து வணக்கம் சொல்லி, பூஜை, உச்ச பூஜை, உச்சப்பாட்டு போன்ற நிகழ்வுகள் நடக்கும். குடியிருத்தல் முடிந்ததும் உயிரிகள், விலங்குகள் தொல்லை வராதிருக்க மூலிகை சேர்ந்த நீர், பூஜை நடக்கும் இடத்தை சுற்றி தெளிக்கப்படுகிறது. ஒவ்வொரு அம்பலத்திலும் அந்தந்த அம்பலங்களுக்கு உரிய தேவ, தேவதைகளை வணங்கி, போற்றி, தாங்கள் செய்யும் பூஜையின் நோக்கம் என்னவென்றும் அதை நிறைவேற்றி தர வேண்டியும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இங்கு முக்கிய தெய்வமான “தர்ம சாஸ்தா” வின் பெயர் மற்றும் புகழை 1008  அல்லது 100008 என்ற கணக்கில் உருவிட்டு தியானிக்கிறான் மணிகண்டன் அவனது படை வீரர்களுடன். இந்த நிகழ்வு இன்றளவும் “லக்ஷார்ச்சனை” என்ற பெயரில் மணிகண்டனாகிய குரு சுவாமியும், படை வீரர்களாகிய ஐய்யப்பன்மார் ஒரு சேர நடக்கிறது. அறிவியல் பார்வையில் யோகாசனத்தில் அமர்ந்து ஒரு செயலை நினைத்து மனதை ஒரு நிலைப்படுத்தும் focusing process  ஆக இந்நிகழ்வு அமைகிறது. நம் உடலின் உள் வாய் பகுதியில் உள்ள “மனோன்மனிய சுரப்பியை” தொடர்ந்து இசைப்பதன் மூலம் சிறந்த மூச்சு பயிற்சி நடைபெறுவதோடு ‘குண்டலினி” சக்தி எழுப்பப்படுவதற்கான கூறுகள் அதிகம் என யோக சாஸ்திரம் மற்றும் அகத்தியனின் மருத்தவ புத்தகமும் தெரிவிக்கிறது. இன்று நடைபெறும் பூஜைகளில் புரோகிதரோ, பெரிய ஸ்வாமியோ  “சஹஸ்ர நாம” அர்ச்சனை சொல்லுகையில் ஐய்யப்பன்மார் “ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா” என்று சொல்கையில் அவர்களது அடி மற்றும் நுனி நாக்கு வாயின் உள்பகுதியில் அமைந்த “மனோன்மனிய சுரப்பி” யை தொடர்ந்து இசைப்பதை ஒரு அறிவியல் நோக்கில் காணாமல் இருக்க இயலாது. இந்த பூஜைகள் முடிந்ததும் மணிகண்டனும், படையும், அவர்களுக்கு துணை நின்ற சுற்றம் சூழல் அனைவருக்கும் உணவளிக்கப்படுகிறது.


மூன்றாம் யாமம்

உணவுக்கு பின் எல்லாவரும் குளித்து “பாலக்கொம்பு எழுன்னல்லிப்பு” எனப்படும் ஒரு நிகழ்வு நடத்தப்படுகிறது. இதன் தொடக்கமாக பந்தலில் இருந்து சங்க நாதம் முழங்கி, அது கேட்கும் தூரத்திற்குள் இருந்து “எழிலம்பால” எனும் மரத்திலிருந்து கிளை வெட்டி எடுத்து வரப்படவேண்டும். இதில் ஆசானும், பூஜை செய்யும் எல்லோரும் சாஸ்தாம் பாட்டு சகிதம், அருகில் உள்ள “எழிலம்பால மரம்” என்கிற மரத்தின் அடியில் சென்று பூஜை செய்து, அந்த மரத்தில் இருந்து ஆசான் சொல்லும் கிளை வெட்டப்பட்டு, தரை தொடாமல் கையில் ஏந்தி கொண்டு வரப்படுகிறது. இதை சுமந்து வரும் பொறுப்பு மணிகண்டனின் படையில் புதிதாக உள்ள வீரர்கள் கையில் ஒப்படைக்கப்படுகிறது. இந்த பால மரம், சாஸ்தாவின் உருவமாக கருதப்படுகிறது. அதனால், இதனை கொண்டு வரும் வழியெல்லாம் “மங்கைமார்” எனப்படும் கன்னிகைகள் கையில் “தாளம்” என்னும் விளக்கேந்தி வரவேற்று கொண்டு செல்கின்றனர்.

“எழிலம்பால” மரத்திற்கு “எக்ஷி பால”, “தெய்வ பால” “சப்த பர்னா” (ஏழு இலைகள் ஒன்றாக உள்ளதால்) என பல பெயர்கள் உண்டு. “தேரவட புத்திசம்” என்ற பத்தியில், “முதலாம் புத்தன்” இந்த பால மரத்தை தனக்கு ஞானம் பெற போதி மரமாய் உபயோகித்துள்ளான்  என அறிந்து கொள்ள முடிகிறது. இம்மரத்திற்கு மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல விசேஷங்கள் சொல்லப்படுகிறது.












இந்த பூஜையில் பால மரம் பூஜிக்கப்பட்டு அதன், பால், இலை, பூ ஆகியன கொண்டு ஒரு வித மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து அரவம் விஷம் முதல் வயிற்று உபாதை போன்ற பல நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. “சாஸ்தா” வின் உருவமாக கருதப்படும் பால மரம் எடுத்து வரப்படும்போது மணிகண்டனின் படை வீரர்கள் ஆவேச கோஷம் இட, படை தளபதிகள் தங்கள் ஆயுதங்களுடன், நடனமாடியபடி புடை சூழ வருகின்றனர். இந்த பால மரத்துக்கு வெளிச்சமாக விளக்கும், தீபமும், சங்க நாதமும் துணை வருகிறது.

நான்காம் யாமம்

பால மரம் பந்தலை அடைகையில், ஆசான் மற்றும் சீடர்கள் உடுக்கை வாத்தியம் இசைத்து தளபதிகள் நடனத்துடன் வரும் “தர்ம சாஸ்த்தா” வை “எதிறேல்ப்பு” எனும் தாளத்தில் ஆட வைத்து ரசித்து பந்தலுக்குள் சகல மரியாதைகளுடன் கொண்டு செல்கின்றனர். விவசாய மக்களின் மூலமான நெல், விதைகள் “பர” எனப்படும் “குருனியில்” நிறைக்கப்பட்டு, பாக்கு மரத்தின் பூக்கள் அதன் மேல் வைக்கப்படுகிறது. இது ஒரு மங்கள நிகழ்வின் அடையாளமாக காணப்படுகிறது. இதன் பொருள் அந்த ஆண்டு அல்லது போக விளைச்சலில் உணவு தானியங்கள் முதல் வருமான தானியங்கள் வரை எல்லாவற்றிற்கும் சிறந்த விளைச்சல் தந்தமைக்கு நன்றி என்றும் மேலும் சிறக்க வேண்டியும் ஆகும். இந்த செயலுக்கு மற்றொரு மாண்பும் அடங்கியுள்ளது. விளக்கு பூஜையை நடத்தி தரும் ஆசான் மற்றும் அவரது சீடர்களின் வாழ்வாதாரத்திற்கான நெல், விதை போன்றவை இந்த பூஜை நடத்துபவரால் தரப்படுகிறது. பாலக்கொம்பு சாஸ்தா ஆலயத்தில் வைக்கப்பட்டு தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது நடனம் ஆடி வந்த படை தளபதிகள் அரசனுக்கும், மற்றவர்க்கும் தம் போர் திறமைகளை செய்து காட்டுகின்றனர். அப்போது செண்டை முதற்கொண்ட வாத்தியங்கள் முழங்குகின்றன. வாத்தியத்திற்கு ஏற்ப ஆடி தமது போர்க்கலைகளை வெளிப்படுத்துவது தனி அழகாகும்.  மஹா பாரத யுத்தம் முதல் கொண்டு கலிங்கத்து போர் வரை, யுத்த காலத்தில் வாத்திய கோஷங்கள் இருந்தது என்பது எல்லாவரும் அறிந்ததே. இதன் மூலம், வாத்தியங்களுக்கும், போருக்கும், போர் முறைக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருந்து வந்ததை உணர முடிகிறது.







ஐந்தாம் யாமம்

பந்தலை வந்தடைந்த பால மரம், ஆயுதங்கள், சாஸ்தா, உப தேவைதைகள் என எல்லாவருக்கும் “அத்தாழ பூஜை” எனப்படும் “உணவூட்டு” நடைபெறுகிறது. பிறகு படையணியின் வாத்திய மற்றும் கலைஞர்கள் தங்கள் கலைகளை வெகு ஈடுபாட்டோடு வெளிப்படுத்துகின்றனர். இதை அவர்கள் இறைவனுக்காய் மட்டும் செய்கின்றனர். ஏனென்றால் செல்லும் போரில் வீர மரணம் அடைந்தால், தங்கள் மனதுக்கு நெருக்கமான தலைவனாகிய இறை தன்மைக்காய், இனியொரு முறை செய்ய இயலாமல் போய் விடுமோ என்ற ஐயத்தினால். மேலும் பல கலைகள்  அறிந்த குருக்கள் இந்த வேலையில் இறைவனை அல்லது இறை தன்மையை  குறித்து பாட்டாலும், தம் பேச்சாலும் படை வீரர்களுக்கு உபதேசிக்கின்றனர்.

ஆறாம் யாமம்

வாத்திய கோஷங்கள், பாடல்கள் மற்றும் உபதேச, உபன்யாசம் முடிந்ததும், “சாஸ்தாம் பாட்டு” என்ற உடுக்கு அடித்து பாடும் நிகழ்ச்சி தொடங்குகிறது. “மாபதி” ஆகிய ஆசான் மற்றும் அவரது சீடர்கள் குழு, “கைலாச பர்வம்” தொடங்கி, “ஐய்யப்பன் ஜனனம்”, “அம்ருத பூஜை” வரை பாடி எல்லாவருக்கும், “தர்ம சாஸ்தா” வின் அவதாரம் குறித்தும் ஐய்யப்பன் சரித்திரம் குறித்தும் பாடி விளக்குகின்றனர். இந்த பாடல்கள் கிராமிய கலையின் எடுத்துக்காட்டாகும். அவர்கள் ஒவ்வொரு கதையையும், அதில் வரும் கதா பாத்திரங்களையும் வருணிப்பது மிகவும் அழகானது.

சரித்திர பாட்டுகள் முடிந்ததும் “மாபதி” யின் குழுவில் ஒருவர் தன் தலையில் “தட்டு” மற்றும் “கிண்டி” என்கிற ஜல பாத்திரத்தை தலையில் வைத்து கொண்டு அமர்ந்திருக்கிறார். ஆசான் தொடங்கி அவரின் மூத்த சீடர்கள் “காணி பாட்டு” “பொளிப்பாட்டு” என்ற பாடலில் நகைச்சுவையாக பல விஷயங்களை சொல்லி கொடுப்பர். முக்கியமாக செல்லும் வழியில் உள்ள மலைகள், அதன் சிறப்பு, எச்சரிக்கை நடவடிக்கை போன்ற விஷயங்களோடு, நையாண்டியும் சேர்த்து பாடுகின்றனர். பாடலை கேட்டு ரசிக்கும் அன்பர்கள் தாம் விரும்பும் காணிக்கையை அந்த தட்டிலும், கிண்டி எனும் பாத்திரத்திலும் சேர்க்கின்றனர். இந்த காணிக்கைகள் ஆசான் மற்றும் குழுவினரின் திறமைக்கு கிடைத்த பரிசாய் மாறுகிறது.


ஏழாம் யாமம்

உடுக்கு பாட்டு முடிந்ததும், மணிகண்டனும், படையும் புலிப்பால் எடுக்க புறப்பட தயாராகின்றனர். அதற்கு தேவையான  கிண்டி எனும் ஜல பாத்திரம் மற்றும் இதர சாதனங்களுடன் ஆசான், தேவி பூஜை நடத்தி படை தளபதிகளை தயார் படுத்துகிறார். ஆசானின் சீடர்கள் உடுக்கடித்து பாட்டு பாடி தேவியின் புகழையும், துணை வர வேண்டுதலையும் வைக்கின்றனர். தேவிக்கான பூஜை வடக்கு பாகத்தில் நடத்தப்படுகிறது.

எட்டாம் யாமம்

எட்டாம் யாமத்தில், திரி உழிச்ச்சல், கனல் சாட்டம் எனும் கலை நிகழ்வை நிகழ்த்தி காட்டுகின்றனர் படை வீரர்கள். இது அவர்களின் பயிற்சியின் உச்சத்தை காட்சிப்படுத்துகிறது. இதன் பிறகு, வேட்ட விளி எனும் பயிற்சி, பாடல் மூலம் பாடி உணர்த்தப்படுகிறது. இந்த நேரம் வடக்கு வாயிலில் பூஜை செய்யப்படுகிறது.

வேட்ட விளி முடிந்தவுடன், வாபரன் என்ற மாபெரும் வீரனை வெல்ல வேண்டி அதற்கான போர் தந்திர ஒத்திகை நடைபெறுகிறது. பின்னாளில் இந்த நிகழ்வு “ஐய்யப்பன்” “வாவர்” வெட்டும் தடவும் என்ற பெயரில் நடத்தப்படுகிறது.



இறுதியாக, சாஸ்தா மற்றும் பரிவாரங்களை அம்பலத்தில் இருந்து வெளியே எழுந்தருள செய்து ‘குருதி அர்ப்பணம்” எனும் குங்கும கலவை தயாரித்து அர்ப்பணம் செய்யப்படுகிறது. இதன் பொருள் தர்மத்தை நிலை நாட்ட என் குருதியையும் அர்ப்பணம் செய்ய துணிகிறேன் என ஒவ்வொரு படை வீரனும், மறவர்களும் மனதார வாக்கு தருகின்றனர். பிற்காலத்தில் இது, பலியிடுதல் என மாற்றுரு பெற்றது. ஆனால் இது தவறான வழி காட்டுதல் ஆகும். செய்த பூஜையில் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டி “மாப்பு” எனும் நிகழ்வின் மூலமாக மன்றாடப்படுகிறது. இறை தன்மையிடம் விடை பெற்று ‘சாஸ்தா விளக்கு” நிறைவு பெற்று மணிகண்டனும், படையும் தங்கள் இலட்சியத்திற்கான பயணத்தை தொடர்கிறார்கள். அவர்கள் பயணம் தொடங்க சுற்றம், சுழல் எல்லாம் இனி இவரை காண்போமா என நினைந்து கண்ணீர் மல்க பிரார்த்தனையுடன் வழி அனுப்புகின்றனர்.

இத்துடன் "சாஸ்தா விளக்கு பூஜை" இனிதே நிறைவுறுகிறது.

பயணம் புறப்பட்ட மணிகண்டனும் படையும், எருமையை கொன்று “அலசா” (அழுதா) நதிக்கரையில் அடக்கம் செய்து, வாபரனை வீழ்த்தி, உதயணனை வென்று, காட்டு வழி கடந்து “அம்பா” (இன்றைய பம்பா) நதிக்கரையை அடைந்து, தாம் இது வரை போரின் காரணமாக கொன்ற பலரின் ஆன்மாவின் சாந்திக்கு வேண்டி தர்ப்பணம் செய்து பிறகு உணவருந்தி சாஸ்தாவை “கால் விளக்கு” எனும் முறையில் “அம்பா” நதிக்கரையில் நினைந்து, தியானம் செய்து பாடல், நடனம் மூலம் உள் முக தியானம் செய்து தீபங்கள் ஏற்றி ‘அம்பா” நதியை வழிபட்டு பயணிக்கின்றனர். பயணத்தில் சபரியின் தியான பலம் உணர்ந்து, தமது ஆயுதங்களை தியாகம் செய்து, நிஷ்களங்க மனதுடன் தர்ம சாஸ்தாவை பொன்னம்பல மேடு என்னும் இடத்தில் தரிசனம் செய்து திரும்புகின்றனர்.





புலிப்பாலுடன் திரும்பிய மணிகண்டன், தன் கடமைகளை நிறைவேற்றி தன் மன ஆசையை தனது தந்தையிடம் சொல்கிறான். ஆணைப்படி, சபரிமலையில் மணிகண்டன் தியானத்தில் அமர அவன் சொன்ன விதிப்படி ஆலயம் அமைக்கப்படுகிறது. ஒரு முடியில் சாஸ்தா பூஜைக்கான பொருளும், மற்றொரு முடியில் தனக்கான பொருட்களுடன் முன்பு புறப்பட்டது போல், மணிகண்டன் மீண்டும் புறப்பட்டு, தன் ஆலயத்தில் சாஸ்தாவை பூஜித்து “அபய சின் முத்திரையுடன் கூடிய த்யானபிந்து ஆசனம்”, “யோகபர்ண முத்திரையுடன் கூடிய கிரஹ நாரிய ஆசனம்”, “அபான பாந்த முத்திரையுடன் கூடிய குத பாத ஸ்ரேஷ்டாசனம்” மற்றும் “பத்ராசன முத்திரையுடன் கூடிய அஷ்டகோண சாஸ்தாசனம்” ஆகிய நிலையில் யோக நிஷ்டையில் ஆழ்ந்து தன் ஆன்மாவை “சாஸ்தா” வில் லயிக்க செய்து பிறப்பருக்கிறான்.





















சபரிமலை, விரதம், மலை யாத்திரை, சபரி மலை கோயில் ஆகியவை எப்படி அறிவியல் பூர்வமானவை என்பதை வேறொரு பதிவில் பார்ப்போம். அது வரை, சாஸ்தா விளக்கு எங்கு நடந்தாலும் “தர்மத்தை” நான் கடைப்பிடிப்பேன், நிலை நாட்டுவேன் என மனதார உறுதி எடுத்து அந்த பூஜை சிறப்புற நம்மால் ஆன பங்களிப்பை தருவோம்.


திங்கள், 22 டிசம்பர், 2014

ஐய்யப்பன் விளக்கு பூஜை

ஐய்யப்பன் விளக்கு பூஜை


முன் பதிவுகளில் கூறியது போல், கார்த்திகை, மார்கழி காலங்கள் தென்னிந்தியாவின் ஆன்மீக நிகழ்வுகளின் காலம் என்று கூறலாம். இந்த இரு மாதங்களும் பலரின் நெஞ்சுக்கு நெருக்கமானவை. இந்த காலங்களில் தென்னிந்தியாவில் நிகழும் பல ஆன்மீக நிகழ்வுகளில் மிகவும் பிரபலமானதும், வித்தியாசமானதும் சபரி மலை புனித யாத்திரை ஆகும். இந்த காலங்களில் சபரி மலைக்கு செல்ல விரதம் இருந்து இரு முடி தலை சுமந்து, பெரும் காட்டு வழிகளை கடந்து சென்று, ஜோதி வடிவில் ஐய்யப்ப ஸ்வாமியை தரிசித்து பிறப்பறுக்க வரம் கோரும் (முயற்சி செய்யும்) நிகழ்வு பல்லாண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒன்று. இப்படி பிறவாமை வரம் கேட்டு செல்லும் அன்பர்களை அந்த கோயிலின் இறைவனின் பெயராலேயே “ஐய்யப்பன்” என்று அழைப்பது வழக்கமாக உள்ளது. இப்படி பலர் சேர்ந்து செய்யும் ஒரு விசேஷ பூஜையே இன்று நடைமுறையில் உள்ள  “ஐய்யப்பன்  விளக்கு பூஜை” ஆகும். இந்த பதிவு அத்தகு சிறப்புடைய “ஐயப்பன் விளக்கு பூஜையை” குறித்தது.

“ஐயப்பன் விளக்கு பூஜையை” பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் “ஐய்யப்ப ஸ்வாமி” யை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம். “ஐய்யப்ப ஸ்வாமி” என்று சொன்னதும் “சூர்பகன்” “மோஹினி அவதாரம்” “பந்தள ராஜா” “மஹா ராணி” “புலிப்பால்” “சபரிமலை கோயில்” “மகர ஜோதி” “இருமுடி” “நெய் அபிஷேகம்” என சில வார்த்தைகளில் அடைத்து வசதியாக சொல்லி விடுவது வழக்கம். இவை எல்லாம் உருவக அலங்கார கதைகளே அன்றி யதார்த்த உண்மை பொருள் ஆக வாய்ப்பில்லை. இதனால் தானோ என்னவோ “பிறப்பறுப்பு” என்ற உன்னத குறிக்கோள் உடைய அந்த ஆலயம் இன்று தன்னுடைய பிரதான குறிக்கோளில் இருந்து பிழறி நெடுந்தூரம் சென்று வணிக மயம் ஆகி விட்டது. இதற்கு பல காரணங்கள் உண்டு. ‘கால மாற்றம்”, “கலாசார மாற்றம்” “மக்களின் நேர்மையின்மை” “மக்களின் ஆசை மற்றும் சுயநலத்தால் விளையும் பயம்” “நல்ல குருமார்கள் இல்லாது போதல்” என அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றில் எதுவானாலும், அது அந்த சமயத்தை வெகுவாக பாதிக்கிறது.

இத்தகு சில தவறான போக்குகளை பற்றிய சரியான புரிதலை உண்டு செய்து, நடைமுறை, யதார்த்த சிந்தனையை தூண்டும் நோக்கில் பதியப்படுகிறது இந்த பதிவு. அப்புரிதல் உண்டாவதற்கு நாம் இப்பதிவின் கருவில் இருந்து சற்று விலகி பின்னோக்கி செல்லுதல் அவசியம் ஆகிறது. விலகி சென்றாலும் விரைவில் திரும்பலாம்.

ஹிந்து மதம் ஒரு மதம் அல்ல

மனித இனம் தோன்றி பல அடுக்கு, பரிணாம வளர்ச்சியை இன்று அடைந்துள்ளது. இந்த பரிணாம வளர்ச்சி பாதையில் பல விபரீதங்களுக்கு பிறகு, மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்ற நோக்கில் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் சாட்சி நிலையில் இருந்து பார்த்து, ஆய்ந்து, அந்த நிலைகளுக்கு ஏற்றவாறு வாழ்வியல் கோட்பாடுகளையும், விதிகளையும், சட்ட, திட்டங்களையும் வகுத்து அதன் மூலம் இயற்கையின் ரகசியத்தை உணர வைக்க ஒரு மார்க்கம் உண்டாயிற்று. அதன் பெயர் “சநாதன தர்மம்”.

“சநாதனி” என்றால் பிரித்தறிதல் என்றும் “தர்மம்” என்றால் “முறை” அல்லது “வாழ்வியலுக்கான முறை” என்றும் பொருள் உண்டு. மனித வாழ்வியலுக்கான மற்றும் இயற்கையின் உன்னதத்தை பிரித்தறிய அடிகோலும் வழிமுறைகள் அடங்கிய இந்த சநாதன தர்மம் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த பூமியின் ஒரு பகுதியில் பின்பற்றப்பட்டும், அதை பின்பற்றிய மனிதர்கள் கலாசார ரீதியாக மேம்பட்டும், அறிவியல் ரீதியாக பெரிய ஞானம் பெற்றும் இருந்தனர். அவர்கள் தான் இன்று வரலாறு கூறும் “சிந்து நதிக்கரையில் வாழ்ந்த, அரேபியரால் “அல் ஹிந்த்” என்றும் ஆங்கிலேயரால் “ஹிந்துக்கள்” என்றும் அடையாளம் காணப்பட்ட மக்கள். “ஹிந்து’ என்ற பெயர் அரேபியர்களும், ஆங்கிலேயர்களும் தங்கள் வசதிக்காக இட்ட பெயர். இன்றைய ஹிந்து மதம் என்று கூறப்படும் “சநாதன” தர்மத்தை பின்பற்றுபவர்களுக்கு “சநாதனர்” என்று பெயர் உண்டு. ஒரு விஷயத்தை புரிய வைப்பதில் “எடுத்துக்காட்டுகளும்” “உருவகங்களும்” பேருதவி செய்கிறது. இந்த நுண்ணிய திறனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்பாக கையாண்ட ஒரு மார்க்கம் உண்டெனில் அது “சநாதன தர்மம்” என கூறி விடலாம். “சநாதன தர்மம்” முற்றிலும் அறிவியல் சார்ந்த சிந்தனை உடையது. இதையே

“ஆன்மீகத்தின் அடிப்படை பகுத்தறிவும், பகுத்தறிவின் உச்சம் ஆன்மீகம்”

என்றும்  என்னுடைய முன் பதிவில் பதிந்திருந்தேன். இதன் பொருள் ஆன்மீகம் என்பது சநாதன தர்மத்தில் “அறிவியலே” ஆகும். அதாவது “நான் யார்” என்ற பகுத்து அறியும் தேடல் மூலம் இந்த பிரபஞ்சத்தின், இயற்கையின் பாதையை பின் தொடர்ந்து சென்று, அறிந்து அதன் ஆதி புள்ளி அல்லது சூட்சமம் எது என்று கண்டு அறிதலே ஆகும். சநாதன தர்மத்தில் இந்த ஆதி புள்ளிக்கு “பிரம்மம்” என்று பெயர்.

ஒன்றோ அல்லது பல கருத்துக்களை குறித்தோ ஆராய்ந்து அதன் உண்மை பொருள் கண்டவர்களை “ஞாநி” என்று கூறுவதுண்டு. அப்படி, மேலே சொன்ன பிரம்மத்தை குறித்த ஆய்வை தொடர்ந்து தெளிவு பெற்றவர்களை “பிரம்ம ஞாநி” என்று அழைத்தனர். இப்போது புரிந்திருக்குமே சநாதன தர்மம் முற்றிலும் அறிவியல் சார்ந்தது என்று. சில, பலரின் சுய நல நோக்கினால் சநாதன தர்மம் என்ற இந்த அறிவியல் சார்ந்த மார்க்கம் இன்று வெறும் “பூச்சாண்டி மதம்” “மூட நம்பிக்கைகளின் குவியல்” என்று தோற்றம் அளிப்பது வேதனைக்குரிய விஷயம். 

சநாதன தர்மப்படி, ஒரு விஷயத்தை நிர்வகிப்பவர் “சாஸ்தா” என்றழைக்கப்படுகிறார். அதன் படி, தர்மங்களை நிர்வகிப்பவர் “தர்ம சாஸ்தா” என்றழைக்கப்படுகிறார்.

அஹம் பிரம்மாஸ்மி” அல்லது “அண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளது” என்ற உன்னத அறிவியல் கோட்ப்பாட்டை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உலகுக்கு எடுத்து சொன்ன மார்க்கம் “சநாதன தர்மம்”. சரி, இந்த அண்டத்தில் உள்ளதை நம் பிண்டத்தில் எப்படி அறிந்து கொள்வது? அதற்காக “சநாதன தர்மம்” பல வழிகளை வகுத்துள்ளது. அவற்றில் தலையாயது “ஞான” “கர்ம” “ராஜ” “பக்த” மார்க்கங்கள். இந்த நான்கு மார்க்கங்களே நம் ஆலயங்களில் சூசகமாக சொல்லப்படும் நான்கு கோபுரம் எனப்படும் பிரம்மத்திற்க்கான வாயில்கள். எந்த வாயில் வழியாகவும் சென்று பிரம்மம் எனும் கருவறை சூட்சமத்தை அறியலாம் என்பதன் உருவகமே அது. இந்த நான்கு மார்க்கத்தையும் பற்றி விரிவாக வேறொரு பதிவில் பார்ப்போம். ஆனால் இந்த பதிவின் கருவாகிய சபரிமலை இந்த நான்கு மார்க்கத்தையும், அறிவியல் மூலத்தையும் எப்படி அறிய உதவுகிறது என்பதை பற்றி சிந்திப்போம்.

இங்ஙனம் பல விஷயங்களை நாம் அலசுவது, இவற்றை பற்றி படித்து, சிந்தித்து, தெளிவடைந்து மற்றவருக்கு விளக்கி “சநாதன தர்மம்” என்ற இக்கால “ஹிந்து மதம்” தன் உயரிய அறிவியல் பாதையிலிருந்து சுயநல, வியாபார நோக்கங்களுக்காக மூட நம்பிக்கைகளால் நிரப்பப்பட்டு அதன் விளைவாக “என் கருத்தே பெரிது” என்ற முட்டாள் தனம் வளர்ந்து ஒருவரை ஒருவர் தம் கருத்துக்காக மாய்த்து சநாதனர் இல்லாது போக கூடாது என்பதற்கான சிறிய முயற்சி.


சபரி மலை, சாஸ்தா, ஐய்யப்பன்

சபரி மலை

சபரி மலை, இன்று வழக்கில் உள்ள ஐய்யப்பன் எனப்படும் மணிகண்டனுக்கு முன்னமே இருந்த ஒரு மலை என்பதை நான் உணர வேண்டும். இராமனின் காலத்தில் இங்கு வாழ்ந்த “சபரி” என்ற ஒரு பெண் துறவியின் பெயரால் இந்த மலை அழைக்கப்படுகிறது. சபரிக்கு ஒரு முன் கதை உண்டு. அவள் பெயரால் அழைக்கப்படுவதற்கு பெரிய காரணம் அவளது யோக ஞானமும், பக்தியும் ஆகும். அவள் யோக ஞானத்தில் சிறந்தவளாகவும், பக்தியினால் மிகவும் அடக்கம் உடையவளாகவும் இருந்ததினாலேயே அவளது புகழ் தொழில் நுட்ப வளர்ச்சியே இல்லாத அக்காலத்திலும், இன்றைய கேரளாவில் இருந்து பல மைல் தூரத்தில் சரயு நதிக்கரையில் உள்ள அயோத்யா வரை சென்றடைந்தது. இதன் பொருள் யோகம் என்கிற சுய சோதனையும், அதனால் கிடைக்கும் ஞானத்தால் செருக்கும் கொள்ளாதிருந்தால் உங்கள் பெயர் உலக புகழ் அடைவதோடு சர்வ வல்லமையுடைய பேரரசர்களும் உங்களை தேடி வருவர் என்பதே.

சாஸ்தா

மேலே குறிப்பிட்டது போல் தர்மத்தை பரிபாலனம் செய்பவர் “தர்ம சாஸ்தா’ ஆகிறார். இந்த சபரி மலையில் உள்ள ஆலயத்தில் “தர்ம சாஸ்தா” ஆட்சி செய்கிறார். இன்றைய காலகட்டத்து மொழியில் சொல்ல வேண்டுமானால் ஒரு பெரிய நிறுவனத்தில் பல கிளைகள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் ஒரு நிர்வாகி இருப்பார். அந்த நிர்வாகி அந்த கிளையை பொறுத்தவரை சகல வல்லமை கொண்ட இயக்குனர் அல்லது உரிமையாளரின் பிரதிநிதி ஆக உள்ளார். அந்த கிளையை பொறுத்தவரை அந்த நிர்வாகி சகல வல்லமை உடையவராக உள்ளார். ஆனால் பெரிய அளவில் பார்க்கையில் இயக்குனர் அல்லது உரிமையாளரின் பிரதிநிதியாக இருக்கும் அவர் இயக்குனர் அல்லது உரிமையாளரின் அளவுக்கு வல்லமை இல்லாதவராகிறார் (Branch Manager Vs owner). இது நிகழ்கால எடுத்துக்காட்டு. இந்த முறையில், இவ்வுலகின் இயற்கை சூட்சுமத்தை உணர்ந்தவரும், அதை அறிய உதவும் வழி முறைகளை அறிந்தவரும், அந்த வழி முறைகளை யாவரும் சரிவர பின்பற்ற வைப்பவருமாகிய “ஆதி யோகி” என்றழைக்கப்பட்ட “தர்ம சாஸ்தா” வின் அவதாரம் (representative) தான் இந்த சபரி மலையில் வாசம் செய்த “தர்ம சாஸ்தா”. பல கால கட்டங்களில், பல “தர்ம சாஸ்தா” உருவெடுத்தே இருந்துள்ளனர்.

ஐய்யப்பன்

“ஐய்யப்பன்” என்பது விளிப்பெயரே அன்றி நிஜப்பெயர் அல்ல. அதே போல் மணி கண்டன் என்பதும் பிற்காலத்தில் வழங்கப்பட்ட உருவகப்பெயரே அன்றி உண்மை பெயர் அல்ல. ஐயப்பன் என்ற பெயருக்கு “அய்யா” “அப்பன்”  என்ற பொருள் உண்டு. நம் கலாச்சாரப்படி, மதிப்பிற்குரிய ஒருவரை நாம் அவர் பெயரிட்டு அழைப்பதில்லை. மாறாக "அய்யா" “அய்யன்” என்றும் “அப்பன்” “அப்பா” என்றும் அழைப்பதுண்டு. மேலும் தொழில் ரீதியாகவும் அழைப்பதுண்டு. உதாரணத்திற்கு “சேகர்” என்பது ஒருவரது பெயர். அவர் “தாசில்தார்” என்ற பதவியில் பல காலம் இருந்ததால் “தாசில்தார்” எனவும் “தாசில்தார் சேகர்” எனவும் பெயர்மாற்றம் பெறுகிறார். அது போலவே “தர்மத்தை சாஸ்த்துவம்(பரிபாலனம்)” செய்பவர் ‘தர்ம சாஸ்த்தா” என்று அழைக்கப்படுகிறார். அதுதானே சரியாகும்!. அப்படி என்றால் இப்போது வணங்கப்படும் “ஐய்யப்பன்” யார்?

தர்மத்தை சாஸ்தவம் அதாவது நிர்வாகம் செய்யும் பணியில் பலர் உண்டு. அதில் ஒருவர்தான் “ராஜன்” அல்லது “அரசன்”. இதனால் தான் அரசனை இறைவனுக்கு நிகராக கண்டார்கள். அதாவது “தர்மத்தை நிலை நாட்டுபவன்”. அந்த அரசனுக்கான பல விதி முறைகள் சநாதன தர்மத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் தலையாயது “மக்களுக்கு சேவை செய்தல்”. அந்த சேவைக்காக அவ்வரசன்  எதையும் செய்ய துணிந்தவனாகிறான். அப்படித்தான் பாண்டிய நாட்டை ஆண்ட சேகரன் (ராஜ என்பது அடை மொழி) என்னும் மன்னன் தன் ராச்சியத்தின் பகுதிகள் தீயவர் ஆளுகையில் இருப்பதையும் அதை தடுக்க தன்னால் இயலவில்லை என்பதால், அதற்காக ஒரு வல்லமை உள்ள சக்தி வேண்டும் என வேண்டி மணி கண்டனை கண்டெடுக்கிறான். அவனுக்கு அரசன் ஆவதற்கான  எல்லா வித்தைகளும் கற்று கொடுக்கப்படுகிறது. கலைகளோடு, இயற்கை சூட்சுமத்தை உடல் வழியே அறியும் யோக கலையும் கற்று கொடுக்கப்படுகிறது.

கல்வியில் சிறந்த மணிகண்டன் தன் தந்தையின் வேண்டுக்கோள் படி, தீயவரை வெல்லவும், தன் வளர்ப்புத்தாயின் நோய் நீங்க மருத்துவ விதிகளுக்கு ஏற்ப “புலிப்பால்” கொண்டு வரவும் காட்டிற்கு செல்கிறான். தன் குருமார்களின் வழிக்காட்டுதலில் இயற்கை சூட்சுமத்தை அறியும் வழியை அறிந்த மணிகண்டன் அவ்வழியின் இறுதி நிலையாகிய பிறப்பு அறுத்தலை செய்ய விழைகிறான். இந்த மூன்று விஷயங்களின் உருவக கூட்டு கலவையே இன்றைய சபரி மலை யாத்திரை.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், மணிகண்டனின் காலத்திற்கு முன்பே இந்த மலை குறித்தும், அங்கிருந்த சாஸ்தா ஆலயம் குறித்தும் கந்த புராணம் முதற்கொண்டு யுவான் சுவாங் எழுதிய பயண குறிப்பேடு வரை பல சான்றுகள் உண்டு. உதாரணத்திற்கு, யுவான் சுவாங் எழுதிய பயண குறிப்பேட்டில் இப்போதைய சபரி மலை பகுதியை (வேறு பெயரில்) குறிப்பிட்டு அங்கு ஒரு “புத்தன்” ஆலயம் இருந்ததென்றும், அங்கு வழிபட நிறைய மக்கள் சென்று வந்தனர் என்றும், அந்த யாத்திரையில் பலர் மரணம் அடைந்தனர், இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் செல்லத்தான் செய்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளான்.

சநாதன தர்மத்தில் “புத்தன்” என்றால் ஞானம் நிறைந்தவன், “ஞாநி” என்ற பொருளும் உண்டு. இப்பொழுது வணங்கப்படும் “கௌதம புத்தர்” புத்தர்களின்  வரிசை கிரமத்தில் இருபத்தி எட்டாவது  புத்தர் ஆவார். புத்தம் என்பது ஞானத்தின் தேடலுக்கான ஒரு வழியே அன்றி தனி மதமாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் சபரி மலைக்கு இன்றளவும் உள்ள விதி முறைகளை நடைமுறை வழக்கில் (practical approach) ஆராய்ந்தால் தற்பொழுது உள்ள புத்த மதத்தின் கோட்பாடுகளோடு ஒத்துப்போகும். கௌதமன் மற்றும் அவனுக்கு முன் இருந்த புத்தர்கள் பின்பற்றிய மார்க்கத்தின் பிறப்பிடம் எது, பின்பற்றிய வழிமுறைகள் யாதென்ற ஆராய்ச்சி நமக்கு இங்கு வேண்டியதாகிறது. மேலும் சொல்ல வேண்டுமானால் “ஐய்யப்பன்” பூஜைகளில் யோக கலையின் முக்கிய அம்சமான மூச்சு பயிற்சியின் ஒரு பகுதியான “தர்ம சாஸ்த்தா அஷ்டோத்திரம்" (நூற்றியெட்டு) மற்றும் "சஹஸ்ர நாமம்" (ஆயிரத்தெட்டு) ஆகியவற்றில் “மஹா புத்தாய நம:” என்று சொல்வதுண்டு. இது ‘புத்தரை” குறிப்பதன்று. மாறாக “பெரிய ஞானியே” என்ற பொருளில் ஆனது. சரி, சபரி மலை என்ற பகுதியில் “புத்தன்” ஆலயம் என்கிற “சாஸ்தா” ஆலயம் இருந்தது என்று நாம் உறுதி கொள்வோம். அதற்கும் சபரி மலைக்கும், சபரி மலை யாத்திரைக்கும், இப்பொழுது நடை முறையில் உள்ள ஐய்யப்ப விளக்கு பூஜைக்கும் என்ன தொடர்பு? பார்ப்போம்.

சபரி மலை, சாஸ்தா ஆலயம் என்றும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் இந்த சாஸ்தாவின் பக்தன் என்றும், அவனது வளர்ப்பு மகன் என்று சொல்லப்படும் “மணி கண்டன்” என்பவன் சகல வித்தைகளையும் கற்று, யோக வித்தைகளையும் கற்று தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற புறப்படுகிறான் என்பதில் எந்த வித உருவகமும் இருக்க வாய்ப்பில்லை. சரி. அப்படி புறப்படும் சிறுவன் தனியே செல்ல இயலுமா?இயலாது. எனவே, தான் வித்தை பயின்ற “ஆலங்காடு” “அம்பலப்புழை” ஆகிய பள்ளிகளில் இருந்தும், தன் அரசனிடமிருந்தும் படையை திரட்டுகிறான். எல்லா வீரர்களும் ஒன்று திரட்டப்படுகிறார்கள். அவர்களை வழிநடத்த இரு படை தளபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இரு தளபதிகளும் “வெளிய கடுத்த” (பெருஞ்சிருத்தை) “கொச்சு கடுத்த” (சிருஞ்சிருத்தை) என்று அழைக்கப்படுகிறார்கள். இன்றும் நம் படைகளில் முக்கியமாக உள்ளவர்களை, சுபேதார், கர்னல், கமாண்டர், சோல்ஜர் என்று ஆங்கிலேய மொழியில் அழைத்து பெருமைப்பட்டு கொள்கிறோமே அதைப்போல!. படை திரட்டப்பட்டு, போர் வியூகங்கள் வகுக்கப்படுகிறது. மலை பிரதேசம் ஆதலால் ஒவ்வொரு மலைக்கும், அந்த மலையை குறித்து நன்கு அறிந்த ஒரு தளபதி அந்த மலையின் பெயரால் (தலைச்சேரி முண்டன், கரிமல முண்டன், தலைப்பார முண்டன் என) போர் விதிப்படி அடையாளம் காணப்படுகிறார்கள். இதில் "கரி" என்கிற கொடிய யானைகளை கொண்ட கரிமலைக்கும், அதன் தளபதியான கரிமல முண்டனுக்கும் சில சிறப்புகள் உள்ளதாக "தாளியோல" எனப்படும் "ஓலைசுவடியில்" குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் யாவரும் மணிகண்டனை போல் பல வித்தைகள் மற்றும் போர்க்கலையை கற்றவர்கள் ஆனால் யோகக்கலையில் சிறந்தவர்கள் அல்லர்.
  
வகுக்கப்பட்ட போர் வியூகங்கள் வெற்றி பெற பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனைக்கான நாள் குறிக்கப்படுகிறது. படை வீரர்கள் ஒன்று சேர பக்தியுடன் பூஜையும் பிரார்த்தனையும், அதே நேரத்தில் கலாச்சார வெளிப்பாடாக கலை நிகழ்சிகளும் நடை பெறுகிறது. அது “சாஸ்தா விளக்கு” அல்லது “சாஸ்தா விளக்கு பூஜை” என்று அழைக்கப்படுகிறது.

சரி, இது வரையில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட கட்டு கதைகள் போல் இருந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அப்படி குழப்பமோ, கருத்து மாற்றமோ இருந்தால் வழக்கம் போல் செய்தி அனுப்புங்கள். அலசுவோம். ஐயமற ஆராய்வோம். 

சாஸ்தா விளக்கு பூஜையை குறித்து வரும் பதிவில் பார்ப்போம்.