புதன், 7 ஜனவரி, 2015

சபரிமலை யாத்திரை

சபரிமலை யாத்திரை

முன் காலங்களில் கார்த்திகை மார்கழி மாதங்களில் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த மந்திரம் “ஸ்வாமியே  சரணம் ஐய்யப்பா” மற்றும் கருப்பு, நீல நிற ஆடைகள். ஆனால் இன்று எல்லா மாதமும் ஒலிக்கும் மந்திரமாகவும், கருப்பு, நீலம் மாறி பல வண்ணங்களாக பரிணமிக்கிறது. இது சபரிமலைக்கு மட்டுமே உரிய முக்கியத்துவம் ஆகும். இன்று பெரும் அளவில் மக்கள் மேற்கொள்ளும் ஒரு புனித யாத்திரையாக சபரிமலை யாத்திரை உள்ளது. அத்தகு விசேஷங்களுக்கு சொந்தமான அந்த சபரி மலையை குறித்து ஒரு பதிவு இது.

சபரிமலை குறித்து முன் பதிவுகளில் கண்டோம். சபரி மலை ஐய்யப்ப ஸ்வாமியை குறித்த கதைகள் நிறையவே சொல்லப்படுகிறது. எது எப்படி ஆனாலும், உலகின் சிருஷ்டி குறித்த மனிதனின் தேடல் வளர வளர, ஆன்மீகத்தின் வளர்ச்சி தடையற்ற காட்டாறாய் உருப்பெற்றது. அப்படி உருப்பெற்ற பல வழிபாட்டு முறைகளில் புராண காலம் தொட்டு இன்று வரை மாற்றத்துக்குட்பட்டாலும் தன் இயல்பு நிலையில் மாறாது இருந்து வருகிறது சபரி மலை யாத்திரை. அத்தகு சிறப்பு வாய்ந்த சபரி மலை யாத்திரையை குறித்து அறிவதற்கு முன் அந்த வழிப்பாட்டு முறையுடன் தொடர்புடைய முக்கியமான சில விஷயங்களை குறித்து பார்ப்போம்.

சபரி மலை
இன்றைய கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பிரிவில் கோட்டயம் மாவட்டத்தில், பத்தனம்திட்ட ஜில்லாவில், பெருநாடு கிராம பஞ்சாயத்தில் பதினெட்டு மலை கூட்டுகளாக காணப்படும் மலை தொகுப்புகளின் நடுவில் கடல் மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 468 மீட்டர் (1535 அடி) உயரத்தில் அமைந்துள்ளது சபரி மலை.

தர்ம சாஸ்தா
பரசு ராமன் எனும் முனிவனால் நிறுவப்பட்ட ஆலயமாக கருதப்படும் சபரி மலை ஆலயத்தில் “தர்ம சாஸ்தா” வின் தியான உருவம் ஸ்தாபிக்கப்பட்டு பலராலும் பூஜிக்கப்பட்டு வந்தது. நவீன காலக்கட்டத்தில் 1821 ல் பந்தள நாடு திருவிதாங்கூர் உடன் இணைக்கப்பட்டபோது அப்பகுதியில் இருந்த 48 ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன. 1950 ல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சபரி மலை ஆலயத்தின் ஒரு பகுதி பெரும் பாதிப்பை சந்தித்தபின் புதுப்பிக்கப்பட்டது. 1971 ல் சில சமூக விரோத கும்பலால் இந்த ஆலயம் சூறையாடப்பட்டது. அப்போதும் சபரி மலை புதுப்பிக்கப்பட்டது.

ஐய்யப்பன் சிலை
சபரி மலையில் உள்ள ஐய்யப்பன் சிலையை குறித்து பல செய்திகள் உள்ளன. புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை (மருந்து) கொண்டு உருவாக்கப்பட்ட “நவ பாஷான” சிலையாயிருந்தது எனவும், மரதகக்கல் கொண்டு செய்யப்பட சிலை எனவும் இரு வேறு கருத்துள்ளது. இந்த நூற்றாண்டில் சபரி மலை ஆலயம் சமூக விரோத கும்பலால் சூறையாடப்பட்டு அந்த சிலை சேதப்படுத்தப்பட்டபின் கிடைத்த உதிரி பாகங்களை ஆராய்ச்சி செய்ததில், அதன் காலம் கணக்கிட இயலாதது என சான்றளிக்கப்பட்டது.

துளசி மற்றும் ருத்ராக்ஷ மாலை
சபரி மலை செல்வதன் தொடக்கத்தின் அறிகுறியாக அணியப்படும் துளசி மற்றும் ருத்ராக்ஷ மாலையும் ஆன்மீகத்தோடு உள்ளதை விட, உடல் சார்ந்தும், மருத்துவக்கலை சார்ந்தும் பல தொடர்புகளை கொண்டது.

கருப்பு மற்றும் நீல நிற உடை
சபரி மலை யாத்திரை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் கருப்பு மற்றும் நீல நிற ஆடையை அணிகின்றனர். இது பழங்கால வாழ்வியல், படை அமைப்பு மற்றும் யோகக்கலையின் தொடர்பையும் உள்ளடக்கியதாக உள்ளது.

விரதம்
சபரி மலை செல்ல ஒரு மண்டல விரதம் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இந்த ஒரு மண்டலம் என்பது ஆன்மீகத்தோடு உள்ளதை விட மருத்துவ கலையின் முக்கிய அம்சமாகும்.

இருமுடி
சபரி மலைக்கு செல்லும் ஐய்யப்பன்மார் தங்களது ஆராதனைக்கு தேவையான பொருட்களை ஒரு முடியிலும், தங்களது தேவைக்கான பொருட்களை ஒரு முடியிலும் வைத்து “இருமுடி” யாக தலை சுமந்து கொண்டு செல்கின்றனர்.

பதினெட்டு படி
சபரி மலை கோயிலுக்கு ஏறி செல்ல பதினெட்டு படிகள் அமைக்கப்பட்டது. இந்த பதினெட்டு படிகளுக்கு இன்று பல விளக்கங்கள் தரப்பட்டாலும், அதன் உண்மை தத்துவம் என்னவோ “பிரம்மம்” எனப்படும் இயற்கையின் ஆதி புள்ளியை உடல் வழியே அறிவதற்கான ஆராய்ச்சி முறைக்கான பயிற்சி முறை ஆகும்.

நெய்
சபரிமலையின் முக்கிய அம்சமாக கருதப்படுவது பசும்நெய் ஆகும். இனி வரும் செய்திகளை யதார்த்த ரீதியிலும், அறிவியல் பார்வையிலும் தொடர்புபடுத்தி சிந்தித்தால் ஒரு முக்கிய பொருள் விளங்கும். சபரி மலைக்கு கொண்டு செல்ல வேண்டிய “நெய் தேங்காய்” யில், நெய் நிரப்பப்பட்டு, தேங்காயின் கண் அடைத்து பல நாட்கள் சுமந்து சென்று “நவ பாஷான” சிலையில் அபிஷேகம் செய்து எடுத்து வரப்பட்டு பத்தியத்துடன் உட்கொள்ளப்பட்டது. சுத்தமான முறையில் தயார் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட நெய்யானது இயற்கையிலேயே மருத்துவ குணங்களை உடையதாகிறது. அத்தகு நெய்யுடன் நவ பாஷாணமும் சேர்ந்தால் கிடைக்கப்பெறும் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே சபரி மலை ஐய்யப்பனை போற்றும்போது “சர்வ ரோக நிவாரண தன்வந்த்ர மூர்த்தியே’ என்று போற்றுகின்றனர். சபரி மலையை அடுத்த கிராமங்களில் உள்ள பழங்குடி மக்கள் “சபரி மலை” ஸ்வாமியை “ஐய்யப்பன் வைத்தியர்” என்றே அழைத்தனர்.

யாத்திரை செய்வோம்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக