புதன், 7 ஜனவரி, 2015

சபரிமலை யாத்திரை – தொடர்ச்சி I

சபரிமலை யாத்திரை – தொடர்ச்சி I


முன் பதிவில் சொன்னது போல், சபரிமலை யாத்திரைக்கான பயிற்சிகள் அனைத்துமே வாழ்வியல் மற்றும் “பிரம்மம்” குறித்த அறிவு தேடலின் படிகள் ஆகும்.

மாலை அணிதல்

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். அது போல “அஹம் பிரம்மாஸ்மி” எனப்படும் அறிவியல் தேடலை நான் தொடங்குகிறேன் என மனம், புத்திக்கும் உடலுக்கும் அறிவிக்கும் ஒரு நிகழ்வு மாலை அணிதல்.
மாலை என்பது ஒரு அடையாளமே. மாலைக்கு ஒரு இலக்கணம் உள்ளது. அணியும் மாலை துளசி அல்லது ருத்ராக்ஷம் கொண்டு செய்தது ஆகலாம். ஆனால் அந்த துளசியும், ருத்ராக்ஷமும் வாழ்ந்து முடித்தவை ஆக இருக்க வேண்டும். துளசி மாலை சிறந்தது. ருத்ராக்ஷம் அணிவதானால் வாழ்வின் ஒவ்வொரு நிலையான பால்யம், குமாரம், யௌவனம், கிருஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம் ஆகிய நிலைகளுக்கு ஏற்ப குருவால் உபதேசிக்கப்படும் ருத்ராக்ஷம் கொண்டு செய்யப்பட வேண்டும். துளசி அல்லது ருத்ராக்ஷத்தை இணைக்க வாழ்ந்து முடித்த கோரைப்புல் வகையை சார்ந்த “தர்ப்பை” புல் கொண்டு இணைக்கப்படவேண்டும். இந்த தர்ப்பையானது ஒவ்வொரு பக்ஷத்திர்க்கும் மாற்றப்பட வேண்டும். துளசி, ருத்ராக்ஷம், தர்ப்பை யின் கூட்டணி வான் வெளியில் இருக்கும் உயிர் சக்தியை கிரகித்து உடலில் செலுத்த வல்லது.

“Vibrations communicate faster and more than language” என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் கண்டு தெளிந்தது. இப்போது பல வண்ண மற்றும் பொருட்களால் ஆன மாலைகள் வலம் வருகிறது. இதை தான் நரேந்திரன் “நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்” என்றான். நமது முயற்சிகளில் நாம் சமாதானம் (compromise) செய்து கொண்டால் வெற்றியும் அதற்கேற்றே அமையும்.

முறைப்படி கோர்க்கப்பட்ட மாலையானது கழுத்தின் இரு புறமுள்ள இரு நாடிகளையும் தொடுமாரும், நெஞ்சின் இரு பாகம் வழியே பிரயாணித்து நாபிக்கமலம் எனப்படும் தொப்புள் வரை அணியப்பட வேண்டும். இது பரவெளியில் இருக்கும் உயிர் சக்தி உடல் முழுதும் பரவ உதவும்.

பழைய காலங்களில் “பிரம்மம்” தேடும் பயிற்சியில் உள்ளவர்களை “பிரம்மச்சாரி” “பிரம்ம ஆச்சார்யன்” அல்லது “பிராமணன்” எனக்கூறுவர். இது ஜாதியின் குறியீடே அல்ல. மாறாக எந்த ஜாதியை சேர்ந்தவனும் பிரம்ம அறிவை நோக்கி செல்லலாம் என்பதன் சாரம் ஆகும். இத்தகு பயிற்சியில் உள்ளவர்கள் இடம் தோளில் இருந்து வலம் அரை வரை தர்ப்பை எனப்படும் “யக்ஞோபவீதம்” என்ற முப்புரி நூலை அணிந்தனர். இன்று அது பொட்டலம் கட்டும் நூல் என்ற அளவில் வந்து நிற்பது சனாதனர்களின் சாதனை ஆகும்.
குரு

சபரி மலை யாத்திரையில் முக்கிய பங்கு குரு எனப்படும் குரு ஸ்வாமிக்கு உண்டு. இன்று ஐய்யப்பனை தவிர ஏறக்குறைய எல்லாருமே குரு ஸ்வாமியை போலத்தான் நடந்து கொள்கிறார்கள். குரு ஸ்வாமி என்பவர் வித்தைகள் காண்பிப்பவரோ, அதி பராக்ரமசாலியோ அல்ல. மாறாக, மிகவும் பணிவான, தன் அடக்கம் உள்ள, கருணை மனம் கொண்ட, இருமைகள் அற்ற, கல்வி கேள்வியில் சிறந்த, உடலை காத்து கொள்ள உதவும் காய கல்ப கலை அறிந்தவரும், பிரம்மத்தை அறிய வழி காட்டுபவரும் ஆவார். அத்தகைய ஒருவரை தேடி, அவர் அனுமதியுடன் “நான் பிரம்ம தத்துவத்தை அறிய விரும்புகிறேன்” என நம் விருப்பத்தை எடுத்துரைத்து மாலை அணிந்து அவர் வழி நடக்க வேண்டும். இத்தகு குரு ஸ்வாமிகள் இன்று உள்ளனரா என்றால் “உண்டு” என்பது பதிலாகவும் “ஆனால் மிக மிக குறைவு” என்பது துணை பதிலாகவும் இருக்கும்.

குருவின் பாதம் பணிந்து தொடங்க வேண்டும் என்பர். இது முற்றிலும் யோக சாஸ்த்திரம் மற்றும் மனோ சாஸ்திரம் ஆகும். குனிந்து காலை தொடும்போது நம் உடல் வளைந்து மூளைக்கான ரத்த ஓட்டம் மூலாதாரத்திலிருந்து பாய்ந்து செல்கிறது. இது “இடை” “பிங்கலை” நாடிகளை சுண்டி விட உதவுகிறது. தம் காலில் பணியும் சீடனை தொட்டு எழுப்புவதோடு அல்லாமல் சீடனின் பாதத்தை குரு ஆனவர் தொட்டு வணங்க வேண்டும். இம்முறையில் இருவரும் ஒரே பயிற்சியை செய்தவர் ஆகின்றனர். இது மரியாதை நிமித்தமானதாக பிற்காலத்தில் மாறியது.

வணங்கு முறை:

வணங்கும் முறைகளில் மனு தர்மப்படி,
தாயை வணங்கும்போது இரு கைகளையும் வயிற்றுக்கு நேரே கூப்பி வணங்க வேண்டும்.
மற்ற மனிதர்களை வணங்கும்போது நெஞ்சுக்கு நேரே இரு கை கூப்பி வணங்க வேண்டும்.
ஆசானையோ, குருவையோ வணங்கும்போது இரு கண்களுக்கு மத்தியில் இரு கை கூப்பி வணங்க வேண்டும்.
இறைவனை வணங்கும்போது தலைக்கு மேல் இரு கை கூப்பி வணங்க வேண்டும்.
இரு கைகளும் கூப்பும் போது நேர், எதிர் மறை முனைகள் தொட ஆற்றல் எழுவது இயல்பு. அவ்வாற்றல் பயனுள்ளதாக மாற்றப்பட  வேண்டும்.

விரதம்

ஒரு மண்டல விரதம் சபரிமலை யாத்திரைக்கு மிக முக்கியமானது. குரு ஸ்வாமி கைகளால் மாலை அணிந்து விரதம் தொடங்கும்போது உணவு, உடல், மனம், செயல், சொல் என எல்லாவிதத்திலும் ஒரு உள்நோக்கு பார்வையிலே சிந்தையை ஆழ்த்த பயில்விக்கிறார் குரு ஸ்வாமி. பொதுவாக, இன்றும் சில இடங்களில் சபரி மலைக்கு மாலை அணிந்த ஐய்யப்ப சுவாமிகள், தம் இல்லத்தில் தங்காது பொதுவான கோயிலிலோ அல்லது மண்டபத்திலோ தங்குவர். அவர்களுக்கான தேவையான எல்லாவற்றையும் அவர்களே செய்து கொள்வர். இதன் பொருள் மனத்தை சிதைவுகளில் இருந்து காத்து கூடிய மட்டும் ஆத்ம விசாரத்தில் இருக்க வேண்டும் என்பதே. உணவு என்பது மிகவும் எளிய உணவே உட்கொள்ள வேண்டும். இதன் பொருள் உணவின் சுவையின் மீதுள்ள நாட்டத்தை குறைத்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதே. இங்குதான் பதினெட்டு படியின் தத்துவமே உதுவுகிறது.

பதினெட்டு படியின் தத்துவம்

முதல் ஐந்து படி நம் உடலிலும், உலகிலும் ஆன நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மற்றும் பூமி ஆகும். அதாவது பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல் மற்றும் உணர்தல் என்ற ஐந்து செயல்களை சதா கவனித்து அதன் தொடக்கம் எது என்ற அறிவை பெறுதலை குறிக்கும்.

அடுத்த எட்டு படிகள் அஷ்ட ராகங்கள் எனப்படும் காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாஷ்ச்சரிய, அசூய, தும்ப எனப்படும் ஆசை, கோவம், பேராசை, சிற்றின்ப ஆசை, கர்வம், போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகிய குணங்களை கவனித்து அதன் தொடக்கம் எது என ஆராய்ந்து அதை தடுத்து மனதையும், எண்ணங்களையும் ஒருமுகப்படுத்துவதாகும்.

அடுத்த மூன்று படிகள் மூன்று நிலைகளாகிய சத்வ, ரஜஸ், தமஸ் எனப்படும் பகுத்தறிதல், செயலில் ஆனந்தித்தல், செயலற்று இருத்தல் ஆகிய மூன்றையும் பழகி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகும்.

கடைசி இரு படிகள் வித்யை, அவித்யை எனப்படும் ஞானம், அஞ்ஞானம் ஆகியவற்றை சிந்தித்து தெளிதல் ஆகும்.

மேலே சொன்ன ஒவ்வொன்றையும் குரு ஸ்வாமி தன் சீடர்களுக்கு பயிற்றுவித்து கண்காணிக்கிறார். இன்றைய அளவில் சொல்ல வேண்டுமானால் மேலே சொன்ன ஒவ்வொரு நிலையும் சித்திக்கும் வரை அந்த ஸ்வாமி அந்த படியிலேயே இருக்கிறார். அவர் அடுத்த நிலை எனப்படும் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவதில்லை.

ஒரு மனிதன் தன் வாழ்வில் இத்தகு பயிற்சிகளை பயின்று உள்முக தியானம் செய்து பதினெட்டு நிலைகளை கடக்கும் போது “அஹம் பிரம்மாஸ்மி” எனும் “தத்வமஸி” பொருளை உணர்கிறார். இதை உணர்த்துவது தான் சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகளும், அதை ஏறி கடந்து நின்றால் நம் முன்னே தெரியும் கொடிமரம் ஆகிய குண்டலினி ஏற்றமும் அதை கடந்து தெரியும் இறைவனின் திரு உருவம் “உன்னில் என்னை கான்” என சொல்லி புன்னகைக்கும்.
இந்த விரதம் அல்லது பயிற்சியானது வெறும் இரண்டு மாதத்திற்கு மட்டும் அல்ல. தொடர்ந்து கடை பிடிக்க வேண்டியது.

ஒரு மண்டல விரதம்

ஒரு மண்டல விரதம் என்பது மேலே சொன்ன நிலைகளில் பயிற்சி எடுக்கும்போது உடல் ருசியால் அந்த பயிற்சி தடை பட்டு விடாமல் காக்க உதவும்.

ஒரு மண்டலம் என்பது ஆன்மீகமானது அல்ல. முற்றிலும் அறிவியலானது. நம் உடல் சிவப்பு மற்றும் வெள்ளை செல்களால் ஆனது என்பது நமக்கு தெரியும். பூமி எப்படி தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை வலம் வருகிறதோ அதே போல் இந்த சிவப்பு மற்றும் வெள்ளை செல்களும் தம்மை தாமே சுற்றி நம் உச்சந்தலையில் தொடங்கி நம் உடலை சுற்றி வந்து மீண்டும் உச்சந்தலையை அடைகிறது. இந்த ஒரு சுழற்சிக்கான காலம் ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தியெட்டு நாட்கள்.

இப்படி நாற்பத்தியெட்டு நாட்கள் பதப்படுத்தப்பட்ட, சுத்திக்கரிக்கப்பட்ட இரத்தம் உள்ள உடலில் மருத்துவ குணமும், நவ பாஷான கலவையுமான நெய் சேரும்போது ஏற்படக்கூடிய உடல் மற்றும் அதனால் விளையும் மன நலன்களை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கருப்பு நீல ஆடை


இருமுடி தாங்கி பிறப்பறுக்க செல்லும் இடம் கொடிய வனத்திற்கு நடுவில் உள்ளது. அவ்வழியில் பல கொடிய மிருகங்கள் இருக்கக்கூடும். பொதுவாக மிருகங்களுக்கு நிறங்கள் தெரியாது. அவற்றிக்கு தெரியும் உருவம் எல்லாம் “கருப்பு” அல்லது “வெள்ளை” நிறத்தில் தான் தெரியும். அதாவது பிம்பமாக தெரியும். அப்படி தெரியும் தருவாயில் “கருப்பு” நிற உடையானது அவற்றிக்கு பயத்தையோ, பெரிய மாற்றத்தையோ உருவாக்காது. “நீல” நிறம் கருப்பு நிறம் போன்றதே. இந்த நிறங்கள் இரண்டுமே அதிர்வலைகளை ஈர்க்கவும்,கட்டுபடுத்தவும், சூட்டை நிறுத்தி வைக்கவும் உதவுவதால் காட்டு வழி பயணத்திற்கு உதவுவதோடு, உடல் ரீதியாகவும் உதவுகிறது.

தொடர்வோம் யாத்திரையை.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக