புதன், 20 மே, 2015

வேண்டுகோள்

சபரி மலை யாத்திரை கட்டுரையின் இறுதி பாகத்தை பதிவிட வேண்டும் என தொடங்கினேன். அது அறிவு அல்லது கருத்து பகிர்தல். ஆனால் அதை விட மிக முக்கியமாக சில கருத்துக்களை பகிர வேண்டும், இல்லை, இல்லை, வேண்டுகோளாக வைக்க வேண்டும் என நினைத்ததால் இதை பதிவிடுகிறேன்.

இன்றைய வாழ்வியல் சூழலில் நமக்கு ஒரு நோய் வந்துவிட்டால் மருத்துவரை அணுகுவோம். அவர் ஒரு மருந்தை தருவார். அந்த மருந்தை குறித்து நாம் ஆராய்வதில்லை. ஏனெனில் நாம் மருத்துவரை நம்புகிறோம். ஆனால் மருத்துவர் மருந்தை மட்டும் தருவதில்லை. மாறாக மருந்தின் வீரியம் சரியாக செயல்பட வேண்டும் என்றால் அதன் உப மருந்துகளாக சில பல விஷயங்களை சொல்வர். உதாரணத்திற்கு பத்தியம், உடற் பயிற்சி, மனப்பயிற்சி என பல. நாம் மருந்தை உட்கொள்ள தவறினாலும் உப மருந்துகளாகிய செயல்களை செய்ய மறப்பதில்லை. ஏனென்றால் நம் உள் மனதுக்கு நன்றாகவே தெரியும் மருந்து என்பது உப மருந்துகளின் துணையின்றி செயல்பட இயலாது என்று. உதாரணத்திற்கு சர்க்கரை வியாதி உள்ள ஒருவர் “டயபத்ரோல்” மருந்து சாப்பிட்டு விட்டு, பத்து ஜிலேபி சாப்பிட்டால் தன் நோய் குறையாது என்பதை நன்கே உணர்ந்திருப்பார். எனவே உப மருந்தாகிய வாய் கட்டுப்பாட்டை தவறாமல் கடைப்பிடிப்பார்.
நாம் சபரி மலை செல்வதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளோம். அது மட்டும் அல்லாமல் பல விதங்களில் ஆன்மீகத்தில் அல்லது இறை வழிபாட்டில் நம்மை இணைக்கிறோம். மேலே சொன்னது போல் மருத்துவர் மீது அசையாத நம்பிக்கை வைத்த நாம், இறைத்தன்மை என்ற ஒன்றையும் நம்பலானோம். ஆனால் மருத்துவர் சொன்னால் உப மருந்துகளை கடைப்பிடிக்க தவறாத நாம் இறைத்தன்மையை அடைய பேருதவி செய்யும் பல உப மருந்துகளை பின்பற்ற தவறினோம். அப்படிப்பட்ட ஒரு சில உப மருந்துகளை குறித்து எழுத வேண்டும் என நினைத்ததால் இந்த பதிவு.

நான் கண்ட, அனுபவித்த, உணர்ந்த, முற்றிலும் செயல்படுத்த இயலாவிட்டாலும், இயன்றவரை செய்ய முயன்ற, முயலும் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். நம்மால் முடிந்த அளவில் செய்வோம். இதுவே இந்த கட்டுரை மூலம் வைக்கப்படும் வேண்டுகோள். என் கருத்தோடு இசைவிருந்தால் பகிருங்கள். மாற்று கருத்து இருப்பின் சுட்டி காட்டுங்கள். உங்களால் எனக்கும் ஒரு புது வழி கிடைக்கட்டுமே. சரி, விஷயத்துக்கு போவோமா!!!!

குடும்ப உணர்வுகளை மதிப்போம்:

சபரி மலைக்கோ அல்லது வேறு ஏதோ ஒரு சாமிக்கோ விரதம் இருக்க போகிறேன், பூஜை செய்ய போகிறேன் என நீங்கள் விரும்பும் பக்ஷத்தில், தயவு செய்து உங்கள் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவுக்கு வாருங்கள். ஏனென்றால், அவர்கள் வசதியும் பார்க்க வேண்டும். விரத நாட்களில் மட்டும் நான் மனிதனாய் இருப்பேன், நீங்கள் என் உணர்வை மதித்து ஒத்துழைக்க வேண்டும், மற்ற நாட்களில் உங்கள் உணர்வுகள் எனக்கு ஒரு விஷயமல்ல என நினைக்கும் பக்ஷத்தில், நாம் என்ன விரதம் இருந்தும் பயன் இல்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்! அதே போல் குடும்பினிகள் குறைகளை மட்டும் எடுத்து சொல்லாமல், தங்கள் விருப்பத்தால் ஏற்படகூடிய நன்மைகளை சொல்லி புரிய வைக்க முயற்சிக்கலாம்.

மாலை:

சபரி மலை யாத்திரையை பொறுத்தவரை, அணியும் மாலையை ஏதோ ஒரு பெரிய விஷயமாக பேசுகிறார்கள். ஆனால் அந்த மாலை ஒரு சிறு அடையாளமே! இது சபரி மலை யாத்திரை அன்றி, இன்று எல்லா கோயில்களுக்கும் அணியும் மாலைக்கும் பொருந்தும். ஏதோ ஒரு மணி மாலையை கடையில் இருந்து வாங்கினோம், கழுத்தில் போட்டு கொண்டோம். நாம் சாமி, சக்தி, கோவிந்தா, என்று அடையாளம் காண்பதை தவிர்த்து, என்ன நோக்கம்? என்ன விரதம்? என்ன கால நிலை? எது உகந்தது? என்ற அறிவியலை உணர்ந்த ஒரு குருவின் அறிவுரைப்படி செயல்ப்படுவது நல்லது.

எத்தனையாவது மலை? எத்துனை வருஷம்?

சபரி மலை யாத்திரையாகட்டும், மற்ற விரத முறை ஆகட்டும், பொதுவாக கேட்கப்படும் கேள்வி, எவ்வளவு வருடமாக இதில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்பதும், நம்மை விட குறைந்த வருடங்கள் என்பின், நம்மை ஒரு படி மேலே வைத்து பார்க்கும் மனப்பான்மை. இது ஒரு குறைப்பாடே! இது ஒரு வித தாழ்வுணர்ச்சியின் மறுமுகமே ஆகும். இதை தவிர்ப்பது நல்லது.

எப்போ உங்க வீட்டுல பூசை, அன்ன தானம்?

இது பொதுவாக கேட்கப்படும் கேள்வி. தவறானது. ஒவ்வொருவருக்கும், அவரவர்களுக்கான சவுகரியங்களும், பணப்பிரச்சினைகளும் இருக்கும். நாம் கேட்பதின் மூலம் அவர்களை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ள வேண்டாம். மேலும் அவரவர் வீட்டில் பூசை, அன்னதானம் போட்டால் தான் ஆயிற்று என்று ஒரு சடங்கே இல்லை.

விரதம்:

சனாதன தர்மத்தில் எந்த ஒரு விரதம் ஆனாலும் அது ஒரு மண்டலம் என்பதை நோக்கியே இருக்கும். அல்லாத ஒன்று, இக்காலக்கட்டத்தில் உண்டாக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். எனவே, எந்த ஒரு விரதத்தையும் ஒரு மண்டலம் என்ற கால அளவில் செய்வது நல்லது.

எந்த ஒரு விரதம் மேற்கொள்வதாயினும், ஒரு மண்டல விரதம் மேற்கொள்ளல் நல்லது மற்றும் அதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை முன்பே சொல்லியிருந்தோம். எனவே, எந்த ஒரு விரதமாயினும், ஒரு மண்டலம் எனவும், அந்த காலத்தை நம் உடலை சுத்திகரிப்பு செய்ய உதவும் ஒரு காலமாகவும் கருத வேண்டும். விரத காலத்தில் செய்யும் நல்ல பழக்க வழக்கங்களை மற்ற நாட்களிலும் செய்வது மிகவும் நல்லது.

ஆடம்பரம்:

நான் பூஜை போடுகிறேன், தீச்சட்டி எடுக்கிறேன் என்ற பெயரில் விழாவாக ஆர்பாட்டம் செய்யாமல், தத்தம் குடும்ப மற்றும் சுற்றம் சூழல் அளவில் யதார்த்த நோக்கத்துக்கு பொருந்தும் விஷயங்களை செய்தல் பாராட்டுதலுக்குரியது. அந்த செலவை சக மனிதன் வாழ உதவுதல் மிக மிக சிறந்தது.

ஓசை:

அண்மையில் சென்னையில் இருந்தபோது, தைபூசம் வந்தது. அப்போது, அருகாமையில் இருந்த ஒரு கோயிலில் காலையில் நான்கு மணிக்கு முழங்க தொடங்கும் ஒலி பெருக்கி மதியம் பன்னிரெண்டு மணி வரையிலும், பிறகு நான்கு மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் சகிக்க இயலாத ஓசை அளவில் முழங்கிகொண்டிருந்தது. ஆலய நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது வந்த பதிலோ ஆச்சர்யம் அளித்தது. “நாங்கள் காலம் காலமாக இப்படித்தான் செய்கிறோம், நீயென்ன புதிதாக குறை சொல்கிறாய் என்ற அளவில் இருந்தது?” இதை சொன்னவர்கள் பெரும்பாலும் நிரம்ப படிக்காதவர்கள், வேலை இல்லாதவர்கள், அரசியல் வாதிகள் மற்றும் சமுதாயத்தில் தமக்கென ஒரு அடையாளம் தேடுபவர் என்பது, கூர்ந்து நோக்கியப்போது புலப்பட்ட ஒரு அசிங்கமான விஷயம். நோயாளிகள், தேர்வுக்கு பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் வேலை பளு தாங்காமல் நொந்து போயிருக்கும் பலருக்கும் இந்த சப்தம் கண்டிப்பாக இனிமையாய் இருந்திராது என்பதை இறையே ஏற்று கொள்ளும். ஆனால் நாம் இறையை விட சகிப்பு தன்மை உள்ளவராகிவிட்டோம். மன சாந்தியை தேடும் நாம், மற்றவரின் மன சாந்தியை குறித்து சிந்திக்க இயலாதவறாகிவிட்டோம்.


ஆன்மீக பயணம்:

சபரி மலையோ அல்லது வேறு எந்த ஒரு ஆன்மீக பயணம் ஆகட்டும், அது சம்பந்தப்பட்ட ஒரு நபர் மற்றும் அவர் குடும்பத்தின் நிகழ்வாகவே காண வேண்டும். அதற்க்கு மாறாக, அவர் ஏதோ பெரிய செயல் செய்வது போல, அவருக்கு மாலை அணிவித்து  மரியாதை செய்தல் தவிர்க்க வேண்டியது. சபரி மலை செல்வது என்ன போட்டியா? அவருக்கு தங்கத்தில் செயின், கையில் காசு கொடுக்க? எந்த ஒரு செயலையும் அடிப்படையை உணர்ந்து செய்வதுதானே சிறந்தது.

குருசாமி

இன்றளவில் இந்த குருசாமிகள் செய்யும் அட்டகாசம் தான் மிக மிக மோசமானதாக உள்ளது. மாலை அணிவிக்க, இருமுடி கட்ட, வீட்டில் பூசை போட என எல்லாவற்றிற்கும் தனித்தனியே விலை பட்டியல் உண்டு. இதை விட கொடுரம் அந்த குருசாமி என்கிற ஆசாமியின் காலில் விழுவது, அவரை தூக்கி தலையில் வைத்து ஆடுவது என பல வேடிக்கைகள் உண்டு. குருசாமி என்பவர் ஒரு வழி காட்டி. அப்படிப்பட்டவரை தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர் எப்படிப்பட்டவர்? ஆன்மீகவாதியா அல்லது ஆன்மீக வியாபாரியா? குறிப்பிட்ட காலத்துக்கு வேஷம் போடுபவரா அல்லது இறை கோட்ப்பாடுகளை வாழ்வியலாக கொண்டவரா என எல்லா வகையிலும் ஆராய வேண்டும்.

குரு வணக்கம்

என்னடா இவன்? குருசாமி காலில் விழுவதை கிண்டல் செய்கிறானே என்று யோசிக்கிறீர்களா? நான் சொன்னது விளம்பரத்திற்காக விழுபவர்களையும் விவரம் இல்லாமல் ஆசிர்வதிப்பவர்களைத்தான்.
வணக்கம் செலுத்துவதன் முறைகளை முன்னொரு பதிவில் சொல்லி இருந்தேன். அந்த வகையில் குரு வணக்கம் நிச்சயம் செய்ய வேண்டியதே. பார்க்கும்போதெல்லாம், பார்த்த இடத்தில் எல்லாம் குரு வணக்கம் செய்வதில் பயனே இல்லை.

சரி, இந்த குரு வணக்கம்தான் என்ன? அதன் பயன் என்ன? 

குரு வணக்கம் என்பது முற்றிலும் யோக தீக்ஷை சம்பந்தப்பட்டது. மற்றவை வெறும் ஆசிர்வாதம் மட்டுமே. சபரி மலை பொறுத்தவரை துறவு நிலை என்பதால் ஆசிர்வாதத்திற்கு அவசியம் குறைவே.

ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, நித்திய பூசை செய்யப்படும் கோயிலுக்குள் மனிதனின் (அவர் எப்படிப்பட்ட குருவாக இருந்தாலும்) காலில் விழுந்து வணங்கவே கூடாது. 

நான் ஈடுபாடு கொண்டிருந்த ஒரு அமைப்பு ஒவ்வொரு வாரமும் ஒரு ஆலயத்தில் பூஜையும், பாட்டு வழிப்பாடும் செய்து வந்தது. பூஜை முடிந்ததும் எல்லோரும் குருசாமியின் பாதத்தில் தொட்டு வணங்குவர். நான் தொட்டு வணங்காததால் எனக்கு “அகங்காரம் பிடித்தவன்” என்ற பட்டமும் தரப்பட்டது. 

இல்லங்கள், தியான மண்டபங்கள், பூஜை நடக்கும் ஆலயம் அல்லாத தனி இடங்களில் குருவின் பாதம் தொட்டு வணங்கலாம். வணங்கும்போது தாங்கள் அன்றளவில் பயிற்சி செய்து கொண்டிருக்கும் குண்டலினி நிலைக்கேற்ற முத்திரையையும், வணங்கு முறையையும் கடைப்பிடிக்க வேண்டும். 

குண்டலினி இயக்கம் மூலாதாரம் எனும் தொடக்க நிலையில் உள்ளவர்கள் முழுவதுமாக நீண்டு படுத்து கைகள் இரண்டையும் மேலே கூப்பி குருவின் பாதம் தொடாமல் ஆனால் பாதத்திற்கு அருகில் கை கூப்பி தொழ வேண்டும். 

குண்டலினி இயக்கம் உணர்ந்தவர்கள் தங்கள் பயிற்சி நிலை மணிபூரகம், அனாகதம், விசுத்தி மற்றும் இவைகளின் இணை நிலைகளில் உணர்கையில் கால் முட்டுகளை மடக்கி, கால் கட்டை விரல்கள் பின்புறம் ஒன்றோடொன்று தொடும்படி இணைத்து, முதுகு தண்டு சீராகவும், தலையோடு சேர்ந்து கீழ் நோக்கி குருவின் பாதத்தில் படும்படியும், இரண்டு கைகளும் தனித்தனியே குருவின் இரு பாதங்களை தொடும்படியும் வணங்க வேண்டும். 

குண்டலினி இயக்கம் ஆக்ஞையில் உணர்பவர்கள் குருவின் முன் நின்று முகத்திற்கு நேராக அனால் நெற்றிக்கு கீழாக கைகளை கூப்பி வணங்க வேண்டும். 

இயக்க நிலை சஹஸ்ராரத்தில் உணர்பவர்கள் மண்டியிட்டு, கால் கட்டை விரல்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடும்படி, முதுகு தண்டும் தலையும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி செய்து கை கூப்பி வணங்க வேண்டும். 

சாதாரணமாக ஆசீர்வாதம் வாங்குகையில் ஆண்கள் நீண்டு படுத்து, கைகள் கூப்பியும், பெண்கள் மண்டியிட்டு, கால் கட்டை விரல்கள் ஒன்றோடொன்று தொடும்படியும், குருவின் பாதத்தை தொடாமலும் வணங்க வேண்டும்.


தொடர்வோம்